கொரோனா வைரஸ் பாதித்த செல்… விஞ்ஞானிகள் வெளியிட்ட வைரல் புகைப்படம்!!!

  • IndiaGlitz, [Monday,September 14 2020]

 

கடந்த ஜனவரியில் இருந்து உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளையே அதிகமாகப் பேசி வருகிறது. அந்நோயை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தடுப்பூசி கண்டுபிடிப்புக்கான ஆய்வுகளை நடத்தி வருகிறது. அதைத்தவிர சிகிச்சை முறைக்கான வழிகளைக் குறித்து பரிசோதனை மேற்கொள்கிறது. இருந்தாலும் முழுமையாக அதன் பிடியில் இருந்து வெளிவர முடியாமல் உலக மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதித்த செல்கள் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின் வெளியிட்டு இருக்கிறது. இந்தப் புகைப்படம் குறித்து விளக்கம் அளித்த விஞ்ஞானிகள் “பாதிக்கப்பட்ட செல் படத்தில் காணப்படுகிற கொரோனா வைரஸின் நுண்ணியத் துகள்கள், பாதிக்கப்பட்ட கொரோனா செல்கள் மூலம் சுவாச மேற்பரப்பில் வெளியாகும் வைரசின் முழுமையான தொற்று வடிவம்” என்று விளக்கம் அளித்து உள்ளனர்.

அதாவது வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களின் மேற்பரப்பில் காணப்படும் வைரஸ் துகள்கள் (வைரஸ் சுமை) பாதிக்கப்பட்ட நபரின் பல உறுப்புகளுக்கும் நோய்த்தொற்றை பரப்புவதற்கு ஒரு மூலமாக இருக்கிறது. அதோடு மற்றவர்களுக்கும் இதுநோய்த் தொற்றை பரப்பி விடுவதற்கும் அடிப்படை ஆதாரமாக இருக்கிறது என்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக் கழகத்தின் குழந்தைகள் நல ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் எப்படி செல்களை தீவிரமாக பாதிக்கிறது, எப்படி நோயை மற்றவர்களுக்கு பரப்புகிறது என்பதைக் குறித்து ஆய்வு செய்து இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மைக்ரோஸ்கோப் கருவி கொண்டு பெரிதாக்கி காட்டப்பட்டுள்ள இந்த செல் படங்கள் மனிதர்களின் சுவாச மேற்பரப்பில் ஏராளமான நுண்ணிய கொரோனா வைரஸ் துகள்கள் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

இந்த நுண்ணிய துகள்தான் பிற திசுக்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் நோயை பரப்புவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. எனவே கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத நபர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அந்த விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.