கொரோனா வைரஸ் குடும்பம்!!! வகைகள், பாதிப்புகள் பற்றி தொகுப்பு!!!
- IndiaGlitz, [Friday,March 20 2020]
கொரோனா என்ற வைரஸ் குடும்பத்தில் பல வகைகள் உண்டு. மனிதர்களை தாக்கும் வைரஸ், பறவைகளைத் தாக்கும் வைரஸ், விலங்குகளைத் தாக்கும் வைரஸ் என இதன் பாதிப்புகள் வித்தியாசப்படுகின்றன.
கொரோனா குடும்பத்தில் கொரோனா – சார்ஸ் வைரஸ் (SARS-CoV), கொரோனா – (MERS-CoV), கொரோனா – Novel Cov19 ஆகிய மூன்று மட்டுமே மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துபவை. கொரோனா குடுத்தின் மற்ற வைரஸ்களான 229E, NL63, OC43, HK01 ஆகிய நான்கும் மனிதர்களுக்கு பெரிய அளவிலான ஆபத்தை விளைவிக்காது. சிறிய அளவிலான உடல் உபாதைகளை மட்டும் கொடுக்கும் தன்மை உடையது.
நுண்ணோக்கியால் பார்க்கும் போது சூரியனின் ஒளிக்கதிர்களைப் போல கூர்மையாக நீட்டிக் கொண்டு இருப்பதால் இந்த வைரஸ் குடும்பத்திற்கு கொரோனா என்ற பெயர் வைக்கப் பட்டது. இதுவரை கொரோனா குடும்பத்தில் 7 வைரஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதில் சார்ஸ், மெர்ஸ் இரண்டும் ஏற்கனவே உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டவை. தற்போது கொரோனா கோவிட் – 19 ம் சேர்ந்து கொண்டு இருக்கிறது.
கொரோனா – சார்ஸ் வைரஸ் (SARS-CoV)
முதன் முதலாக 2002 இல் சீனாவின் குவாங்டன் மாகாணத்தில் இருந்து பரவியது. இந்த வைரஸ் தாக்கத்தைக் குறித்து உலகச்சுகாதார அமைப்பு மிகவும் அச்சுறுத்தும் தன்மை கொண்டது என அறிவித்தது. இந்த வைரஸ் தாக்கம் 26 நாடுகளுக்கு பரவி 8,000 க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை குடித்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் நடுக்கம் போன்றவை சார்ஸ் வைரஸ் நோய் தொற்றின் அறிகுறியாக அப்போது கணிக்கப் பட்டது. இதுவும் தீவிரமான சுவாசக் கோளாறுகளை மனிதர்களுக்கு கொடுத்து மனிதர்களை ஆபத்தான நிலைமைக்குத் தள்ளும் தன்மை கொண்டது.
சீனாவில் மட்டும் சார்ஸ் வைரஸால் 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் புனுகு பூனையில் இருந்து பரவியதாக WHO அறிவித்தது. இதுவரை இந்த வைரஸ் நோய் தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
கொரோனா – (MERS-CoV)
2019 இல் மெர்ஸ் வகை வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பரவிய இந்த வைரஸ் ஒட்டகங்களில் இருந்து மனிர்களுக்கு பரவியது. உலகம் முழுவதும் சுமார் 858 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கொரோனா – Novel Cov19
கொரோனா குடும்பத்தில் புதிய வகை என்பதைக் குறிப்பதற்காக நாவல் என்ற பெயர் இந்த புதிய வைரஸ்க்கு சூட்டப் பட்டுள்ளது. மேலும், மனிதர்களுக்கு கிருமிகளைத் தாக்கி மரணத்தை உண்டாக்கும் தன்மை உடையவை என்பதை அர்த்தப் படுத்தும் நோக்கில் CoV என்ற மருத்துவ குறியீடும் சேர்த்துக் கொள்ளப் பட்டு இருக்கிறது. இந்த மருத்துவக் குறியீடு (CoV) சார்ஸ், மெர்ஸ், தற்போதைய புதிய நாவல் வைரஸ் ஆகிய மூன்றுக்கும் பொருந்தும். 2019 இல் பரவத் தொடங்கியது என்பதை அர்த்தப் படுத்தும் விதமாக 19 என்பதையும் இத்துடன் இணைத்து CoV-19. மருத்துவத் துறையில் இந்த புதிய கொரோனா வைரஸ் SARS-CoV-2 என்ற குறியீட்டில் தான் அழைக்கப் படுகிறது.
கொரோனா கோவிட்-19 சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் கிருமியும் ஒருவரிடமிருந்து ஒருவருக்கும் பரவும் தன்மையுடையது. இது 31, டிசம்பர் 2019 இல் முதல் முதலாக கண்டுபிடிக்கப் பட்டது. முதலில் விலங்குகளின் இறைச்சியில் இருந்து பரவியதாகச் சொல்லப் பட்டது. ஆனால் இதுவரை இதற்கான மூலக் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.
செல்களின் கதவு, கைப்பிடி
வைரஸ்கள் தனியாக வாழவோ அல்லது வளர்ச்சி சிதை மாற்றங்களைச் செய்யவோ முடியாது. எப்பொழுதும் உடலில் உள்ள ஓம்புயிரி செல்களையே வைரஸ்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. விலங்கு மற்றும் மனிதனின் உடலில் உள்ள செல்கள் இந்த வைரஸ்களை ஆர்வமாக ஏற்றுக்கொள்வதும் இல்லை.
ஆனால் உடலில் உள்ள செல்கள் தனது சுழற்சிக்காகக் கழிவுகளை வெளியேற்றவும் புதிய செல்களை உற்பத்தி செய்யவும் தொடர்ந்து சுருங்கி, விரிவும் போது அந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைரஸ் தொற்றுகள் உடலில் எளிமையாகப் புகுந்து விடுகிறது.
செல்கள் இயங்குவதற்குத் தேவையான புரதப் பொருள்கள் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை வெளியே இருந்து எடுத்துக் கொள்கிறது. அதே போல கழிவுகளை வெளியேற்றவும் செய்கிறது. இதற்காக ஒவ்வொரு செல்லிலும் கதவு போன்ற ஒரு அமைப்பு இருக்கும். தேவை ஏற்படும்போது இந்தக் கதவு திறந்து பின்பு மூடிக்கொள்ளும். செல்களுக்குத் தேவையான சரியான புரதப் பொருட்கள் கிடைக்கும்போது அவற்றை ஏற்பதற்கு கைப்பிடி போன்ற ஏற்பிகளும் இருக்கும். புரதங்களின் வடிவில் ஒரு பகுதி சாவி போன்றே இருக்கும். நல்ல புரதங்கள் இந்த கதவுக்குள் நுழையும் போது சாவி போன்ற அமைப்பினால் எளிதாக உள்ளே நுழைந்து அதன் இயக்கத்தை தொடங்கும். இந்த காதவு, சாவி, கைப்பிடி அமைப்பில் ஒரு கள்ளச்சாவி தான் வைரஸ் கிருமி.
கள்ளச்சாவி
எப்படி புரதங்கள் சாவி போன்ற அமைப்பை வைத்திருக்கிறதோ அதோபோல இந்த வைரஸ்களும் கள்ளச்சாவி போன்ற RBD புரதம் மற்றும் செல்சுவரின் கதவைத் திறக்கும் சாவி அமைப்பை கொண்டிருக்கின்றன. செல்களில் நடக்கும் இயல்பான நடவடிக்கைகளில் இந்தக் கள்ளச்சாவி போட்டு உள்ளே நுழைந்து விடுகிறது வைரஸ்.
ஆனால் எல்லா வைரஸ்களும் எல்லா கதவுகளுக்குள்ளும் (ஓம்புயிரி செல்கள்) நுழைய முடியாது. எனவே தான் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல வைரஸ்கள் மனிதர்களை தாக்குவதில்லை. மனிதச் செல்களில் (ஓம்புயிரி செல்கள்) கள்ளச்சாவி போட்டு (RBD புரதம் போன்ற கதவைத் திறக்கும் சாவி) நுழைந்து விடும் வைரஸ்கள் மட்டுமே மக்களுக்கு நோய் தொற்றை வரவழைக்கிறது.
தற்போது, கொரோனா வைரஸிடம் மனிதன் மற்றும் விலங்குகளில் உள்ள செல்களில் புரதத்தை பற்றிக்கொள்ளும் கள்ளச்சாவி இருக்கிறது. அந்தக் கள்ளச்சாவி தான் CoV-2 ஆகும். கொரோனா வைரஸிடம் உள்ள கள்ளச்சாவி அதாவது அதன் வடிவம் எப்படி மனிதச் செல்களில் புரதத்தைக் கவ்விக் கொள்கிறது? அதைத் தடுப்பதற்கான வழி என்ன? என்கிற ரீதியில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகள் தடுப்பு மருந்துகளை உருவாக்குவதற்கு நல்ல வழிமுறையாகவும் இருக்கும் என்பதை தற்போது உலகமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.