கொரோனா வைரஸும் வௌவால்களும் பால்ய நண்பர்களா??? அறிவியல் என்ன சொல்கிறது???
- IndiaGlitz, [Friday,April 24 2020]
கொரோனா வைரஸ் என்பது வௌவால்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. பல விலங்கு இனங்களில் கொரோனா வைரஸ் கிருமி காணப்படுகிறது. ஆனால் பறக்கும் பாலூட்டி இனமான வௌவால்களில் இது நெருக்கமான பிணைப்பை கொண்டிருப்பதாகத் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதாவது, வௌவால்களும் கொரோனா வைரஸ் கிருமிகளும் கிட்டத்தட்ட மில்லியன் கணக்கான வருடங்களாக பிணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது வௌவால்கள் குறித்த ஆய்வானது சயின்டிஃபிக் ரிப்போட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, நோய்களை சுமக்கும் பூச்சிகளை உண்ணுதல், வெப்பமண்டல வனப் பகுதிகளில் மரங்களின் விதைகளை சிதறடிப்பது போன்ற பல நல்ல பணிகளை வௌவால்கள் செய்து வருகின்றன. இயற்கையாக கொரோனா வைரஸ்கள் வௌவால்களில் பல காலமாக இருக்கின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
“வௌவால்களுக்கும் கொரோனா வைரஸ்களுக்கும் இடையில் ஒரு ஆழமான பரிணாம வரலாறு இருக்கிறது” என சிகாகோவின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஆய்வு இணை ஆசிரியர் ஸ்டீவ் குட்மேன் தெரிவித்துள்ளார். வௌவால்களில் காணப்படும் வைரஸ் பற்றி அறிந்து கொள்வதற்காக சிகாகோவின் புலம் அருங்காட்சியத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆப்பிரிக்காவின் அருகில் வாழ்ந்து வரும் 36 வகை வௌவால் இனங்களை ஆய்வு செய்தனர்.
இரண்டிற்கும் நீண்டகால பரிணாம வரலாறு இருப்பதை உணர்ந்துகொண்ட விஞ்ஞானிகள் மேலும் “கொரோனா வைரஸ்கள் எவ்வாறு உருவாகின என்பதைப் பற்றி நன்கு புரிந்துகொள்வது எதிர்காலத்தில் பொது சுகாதார திட்டங்களை உருவாக்குவதற்கு வசதியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இவர்களது ஆய்வுப்படி வௌவால்களில் இருப்பது போன்று பல்வேறு வகையான கொரோனா வைரஸ்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வைரஸ்கள் மனிதர்களுக்கு பரவுவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.