இந்தியாவின் கொரோனா தடுப்பூசி: தற்போதைய நிலைமை என்ன???
- IndiaGlitz, [Wednesday,July 15 2020]
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இந்திய மருத்து ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் பல்ராம் பார்கவா கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து மத்திய அரசின் தரப்பிலும் இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தில் நிலைக்குழுக் கூட்டத்தொடர் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்திய அறிவியல் தொழில் நுட்பத்தின் விஞ்ஞானிகள் ஆகஸ்ட் 15 என்பதெல்லாம் சாத்தியமில்லை. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை எதிர்ப்பார்க்கலாம். அது இந்தியக் கண்டுபிடிப்பாகவோ அல்லது இந்திய தயாரிப்பாகவோ இருக்கும் எனவும் தெரிவித்து இருந்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று தலைநகர் டெல்லியில் ICMR இன் இயக்குநர் பல்ராம் பார்க்கவா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். அந்தச் சந்திப்பின்போது இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் அதன் முதற்கட்ட ஆய்வில் வெற்றிப் பெற்று இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். எலி மற்றும் மற்ற விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தடுப்பூசி நல்ல பலனைக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் முழுமையான கிளினிக்கல் சோதனை செய்யப்பட்டு விரைவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றிய ஆய்வுகளை பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் பூனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனமும் இணைந்து மேற்கொண்டு வந்தது. அவர்கள் கண்டுபிடித்த COVIAXIN என்ற தடுப்பூசிக்கு கிளினிக்கல் சோதனை நடத்த சென்ற மாதம் இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதலும் வழங்கியிருந்தது. அதைத்தவிர அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் காடில் ஹெல்த்கேர் லிமிட் எனும் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்து இருந்தது. இந்த தடுப்பூசிக்கும் கிளினிக்கல் சோதனை செய்ய இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜுலை 7 ஆம் தேதி கிளினிக்கல் சோதனை தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது ICMR இன் இயக்குநர் பல்ராம் பார்க்கவா இந்தியாவின் இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் முதற்கட்ட சோதனையில் வெற்றிப் பெற்றுள்ளன எனத் தெரிவித்து இருக்கிறார். இதனால் இந்தியா கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னிலை வகித்து வருவதாக பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே ரஷ்யாவில் உள்ள செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியின் கிளினிக்கல் சோதனையை வெற்றிக்கரமாக நடத்தி முடித்து விட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ரஷ்யாவின் கண்டுபிடிப்பாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. அதைத்தவிர ஜெர்மனி, இத்தாலி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மெடர்னா போன்றவை தற்போது மனிதர்கன் மீதான கிளினிக்கல் சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.