கொரோனா சிகிச்சையில் கலக்கும் நம்ம ஊரு சித்த வைத்தியம்? பரபரப்பு தகவல்!!!
- IndiaGlitz, [Thursday,September 10 2020]
கொரோனா எனும் பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த தகவல் எப்போது வெளிவரும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அது உடலில் உள்ள பெரும்பலான பாகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அதைவிட இன்னொரு முக்கியப் பிரச்சனை சுவாசப் பிரச்சனையை ஏற்படுத்தி மரணத்தையும் வரவழைத்து விடுகிறது. இதனால் சிகிச்சை முறைகளும் மிகக் கடினமாக இருப்பதாக மருத்துவ உலகம் அச்சப்படுகிறது.
உலகம் முழுக்க நிலைமை இவ்வாறிருக்க தமிழகத்தில் கொரோனாவிற்காக ஏற்படுத்தப்பட்ட சித்த வைத்திய மையங்களில் இதுவரை ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்ற இனிப்பான செய்தி வெளியாகி இருக்கிறது. தமிழக அரசு கொரோனாவிற்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளில் ஒன்றாக சித்த வைத்தியத்தையும் இணைத்து இருக்கிறது. இந்தச் சிகிச்சைக்காக கரூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் சித்த மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப் பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஒரு மாதமாக இந்தச் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 1,152 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக தி இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கரூரில் 397 பேரும், பெரம்பலூரில் 205 பேரும் அரியலூரில் 670 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர் என்றும் தற்போது அவர்கள் முற்றிலும் குணமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதைத்தவிர கொரோனா விஷயத்தில் உடலில் ஏற்கனவே இதயநோய் போன்ற மற்ற பாதிப்புகள் இருந்தால் ஆபத்து அதிகம் என மருத்துவ உலகம் அஞ்சுகிறது. ஆனால் சித்த வைத்திய மையங்களில் மற்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் எளிதாக குணமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த மையங்களில சிகிச்சை பெற்றுவந்த ஒருவர்கூட இதுவரை உயிரிழக்க வில்லை என்பதே மிகப்பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.