கொரில்லாவுக்கு கொரோனாவா??? எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்!!!

  • IndiaGlitz, [Saturday,April 11 2020]

 

கொரோனா நோய்த்தொற்று மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சீனாவில் சிம்பன்சி மற்றும் பொம்மேரியன் இனத்தைச் சார்ந்த 2 நாய்களுக்கு கொரோனா நோயத்தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது. மேலும், அமெரிக்காவில் ஒரு புலிக்கும் கொரோனா இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா நோய்த்தொற்று விலங்குகளிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவைகளுக்கு கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்படும் எந்த நோய்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புடைய பெரிய குரங்களுகளான கொரில்லா, சிம்பன்சி போன்ற குரங்குகளுக்கு கொரோனா தொற்றும் அபாயம் இருப்பதாகத் தற்போது விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுவரை எந்த குரங்குகளுக்கும் இதுபோன்ற தொற்றுகள் ஏற்படவில்லை என்றாலும் தென் ஆப்பிரிக்காவின் சுற்றுலாத் தளங்களில் இருந்த பல குரங்குகள் சுவாச கோளாறுகளால் அவதிப்பட்டதாக The Nature இதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மக்களிடம் இருந்து சில வைரஸ் கிருமிகள் இப்படியான அறிகளை ஏற்படுத்தியிருக்கும் என்ற சந்தேகமும் இருந்துவருகிறது. இதனால் ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள பல சுற்றுலாத் தளங்கள் மக்களின் பார்வைக்கு தடை விதித்து இருக்கின்றன.

Emory University பேராசிரியர் Thomas Gillespie கொரோனா நோய்த்தொற்று கொரில்லாக்களையும் பெரிய குரங்குகளையும் எளிதாகத் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்து இருக்கிறார். இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் இதுகுறித்து மார்ச் 15 ஆம் தேதி மக்கள் சுற்றுலாத் தளங்களுக்கு சென்றால், விலங்குகளிடம் இருந்து சுமார் 33 அடி வரை தள்ளியிருக்குமாறு கேட்டுக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. காபோன், ருவாண்டா போன்ற நாடுகள் கடந்த சில மாதங்களாக சுற்றலாத் தளங்களை முற்றிலுமாக தடை செய்திருக்கிறது.

தற்போது உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து தடைச் செய்யப்பட்டுள்ள நிலையிலும் இளைஞர்கள் அருகிலுள்ள காடுகளுக்கு செல்லும் நிலைமை அதிகரித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இளைஞர்கள் ஊரடங்கில் இருக்காமல் காட்டுப்பகுதிகளுக்குச் சென்று வேட்டையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் உலகம் முழுவதுமே காட்டுபகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.