இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களில் வெகுவாக குறைந்து இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரித்து இருக்கும் கொரோனா எண்ணிக்கையினால் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 275 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,60,441 ஆக அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா முழுக்க அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையை கணக்கில் கொண்ட மத்திய அரசு நேற்று 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்து இருக்கிறது. மேலும் இந்தியாவில் இதுவரை 5,68,41,286 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தற்போது பள்ளி, கல்லூரிகளிலும் தலைத்தூக்கத் துவங்கி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் தஞ்சை மாவட்டத்தின் திருப்பனந்தாள் அரசு உதவிபெறும் பள்ளியில் 3 மாணவர்களுக்கும் திருவையாறில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் தஞ்சையில் ஒட்டுமொத்தமாக 180 பள்ளி மாணவர்களுக்கும் 13 கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா உறுதியாகி இருக்கிறது.