கொரோனா; பலியானவர்களை உலக நாடுகள் இப்படித்தான் அடக்கம் செய்கிறது!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவால் உயிரிழந்தவர்களை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதைக் குறித்து உலகச்சுகாதார நிறுவனம் சில வழிமுறைகளை சுட்டிக்காட்டியிருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களில் இருந்து கொரோனா நோய்த்தொற்று பரவுமா என்பது குறித்து இதுவரை எந்த உறுதியான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஆனால், கொரோனா பாதித்த உடல்களில் இருந்து திரவங்கள் வெளிப்பட்டு அது மற்றவர்களின் மீது படும்போது நோய்த்தொற்று பரவும் என WHO கூறியிருக்கிறது. மேலும், இறந்தவர்களை அடக்கம் செய்யவோ அல்லது புதைக்கவோ அவர்களது வழக்கப்படி செய்யலாம். மத வழிபாடுகளைக்கூட செய்துகொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தவிர கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவல் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் பலி எண்ணிக்கையும் கட்டுக்கடங்காமல் இருக்கும் நிலையில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் பல நாடுகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதுபற்றிய வீடியோ ஒன்றை பிபிசி தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. உலகளவில் அதிகப்பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் அமெரிக்கா, அடக்கம் செய்வதற்காக நியூயார்க்கின் ஹாட் தீவைத் தேர்வு செய்திருக்கிறது. கிட்டத்தட்ட நியூயார்க் மாநகராட்சி 150 ஆண்டுகளாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காகவே இந்தத் தீவைப் பயன்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்போது தனித்தனியான சவப்பெட்டிகளில் அடக்கம் செய்ய முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. எனவே, நேரான வரிசையில் நீண்ட குழியைத் தோண்டி அதில் பல அடுக்குகளாக இறந்தவர்களை நியூயார்க் சுகாதாரத் துறை தற்போது புதைத்து வருகிறது.
பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகள் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடங்கில் குறைந்தது 10 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது. அவர்களும் 6 அடி இடைவெளி விட்டு நிற்குமாறு அறிவுறுத்தப் பட்டிருக்கின்றனர். இந்தேனேசியா மொத்தமாக இடுகாடுகளில் அடக்கம் செய்கிறது. இஸ்ரேல் நாட்டில் சவப்பெட்டிகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களால் மூடப்படுகிறது. சவப்பெட்டிகளில் யூதர்களை புதைக்கக்கூடாது என்ற விதியிருப்பதால் இந்த முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சீனாவில் வுஹான் மாநகரம் உயிரிழந்தவர்களை கொத்து கொத்தாக மின்சார அடுப்புகளில் வைத்து எரித்தன. இந்த நடவடிக்கைகளிலும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இறந்தவர்களின் சாம்பலை மாநாகராட்சி நிர்வாகத்திடம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டிருந்தது. பிலிப்பைன்ஸில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை உள்ளூரில் அடக்கம் செய்வதற்குப் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே புதைப்பதற்காக புதிய இடுகாட்டினை தற்போது உருவாக்கியிருக்கிறது அந்நாட்டு அரசு.
இதில் ஈக்வடாரில் தான் அதிகபடியான கொடூரம் அரங்கேறி வருகிறது. மாநகராட்சி பணியாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் தருவாயில் பலர் தெருக்களில் இறந்தவர்களின் உடல்களை வீசியெறிகின்றனர். சுகாதார துறை இறந்தவர்களின் உடல்களை சேகரிப்பதற்கே நான்கு நாட்கள் ஆகிறது. மேலும், புதைப்பதற்கு இடமில்லாமல் சிலர் தெருக்களிலே வைத்து எரித்து வருகின்றனர். மருத்துவ உபகரணம், மருந்துப்பொருட்கள், படுக்கைகள் என அனைத்திற்கும் அந்நாட்டில் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் பலர் வீடுகளிலேயே சிகிச்சை இன்றி இறந்துபோகின்றனர். பலருக்கு கொரோனா இருப்பது தெரியாமலே இறந்துபோகும் நிலைமையும் தொடருக்கிறது. சவப்பெட்டிகள் இல்லாமல் அட்டைப்பெட்டிகளில் வைத்து அந்நாட்டு சுகாதாரத் துறை இறந்தவர்களை அடக்கம் செய்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com