எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை!!! அதிரடி காட்டும் புதிய திட்டம்!!!
- IndiaGlitz, [Monday,August 17 2020]
அமெரிக்காவில் எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை செய்யும் எளிய வழிமுறை அடுத்த வாரத்தில் இருந்து அனைத்து மாகாணங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா அதிகமாகப் பரவியுள்ள அமெரிக்காவில் பரிசோதனை கருவிகளுக்கு நிலவும் பற்றாக்குறையைத் தவிர்க்கும் விதமாக இந்தப் புதிய கொரோனா பரிசோதனை முறை அறிமுகம் செய்யப்படுகிறது என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் குழு தெரிவித்து உள்ளது.
யேல் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனையை துல்லியமாக நடத்தும் சலிவா டைரக்ட் என்ற பரிசோதனை முறையை கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் எளிமையாக மற்றும் துல்லியமாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள முடியும் எனவும் அதன் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இம்முறை மற்ற கொரோனா பரிசோதனைகளை விட மிக வேகமானது என்றும் செயல்திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த பரிசோதனை முறையை அமெரிக்கா முழுவதும் அமல்படுத்த அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சலிவாக டைரக்ட் பரிசோதனைக்கு குறைந்த அளவு காலம் மட்டுமே தேவைப்படும். இதனால் எளிதாக கொரோனா முடிவுகளைத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் உமிழ்நீரை எடுப்பது மிகவும் சுலபம் என்பதும் இச்சோதனை முறையில் உள்ள சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதுவரை 53.61 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.69 லட்சம் மக்கள் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். தற்போது அறிமகப்படுத்தப் படவுள்ள எச்சிலைக் கொண்டு பரிசோதனை செய்யும் முறையால் கருவிகளுக்கு நிலவும் பற்றாக்குறையை குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.