கொரோனா பயங்கரம்: கண்டுபிடிக்கப்படாத சமூகப் பரவல் அதிகரிக்கும்!!! WHO எச்சரிக்கை!!!
- IndiaGlitz, [Saturday,May 09 2020]
கொரோனா பாதிப்பு மேற்கத்திய நாடுகளில் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் தற்போது ஆப்பிரிக்கா நாடுகளையும் தாக்க ஆரம்பிவித்து விட்டது. உலகத்தின் எந்த மூலையையும் விட்டு வைக்காத கொரோனா பரவல் வேகத்தைக் கண்டு உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் கண்டுபிடிக்கப்படாத சமூகப் பரவலை ஏற்படுத்தும் என உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
கொரோனா வைரஸ் யாரிடம் இருந்து பரவியது என்ற பயண வரலாறை அறிந்து கொள்ளும் முறையில் இந்த நோயை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் கொரோனா வைரஸ் எவரிடமிருந்து பரவுகிறது என்ற வரலாறை தெரிந்து கொள்ள முடியாத நேரத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது கடினம். இந்நிலையை உலகில் பல நாடுகள் சந்திக்க வேண்டிவரும் எனத் தற்போது WHO எச்சரித்து இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியிருக்கிறது. உயிரிழப்பு 2 லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. மேலும் கண்டுபிடிக்கப்படாத சமூகப் பரவலை பல நாடுகள் சந்திக்கும் பட்சத்தில் நிலைமை இன்னும் மோசமாகலாம் என பலரும் கவலைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆப்பிரிக்கா போன்ற வளர்ச்சி குன்றிய நாடுகளில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என WHO வினன் ஆப்பிரிக்கத் தலைவர் மாட்சிடிசோ மொயட்டி தெரிவித்து உள்ளார். இதனால் கொரோனாவினால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவிப்புரிய 6.7 பில்லியன் தேவைப்படலாம் எனவும் ஐ.நா சபை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் “உதவி பெறும் நாடுகளின் பட்டியல், தற்போது வரை குறைவாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் மருத்துவக் கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பினால் பெரும்பாலான உலக நாடுகள் பசி, பட்டிணி வறுமையை சந்திக்க வேண்டிவரும் எனவும் முன்னதாக ஐ.நா. எச்சரித்து இருந்தது. இந்தியாவிலும் கொரோனா பரவலின் பற்றிய வரலாற்றை அறிந்துகொள்ள முடியாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. மேலும், இந்தியாவில் வரும் ஜுலை மாதம் கொரோனா வைரஸின் தாக்கம், உச்சத்தை எட்டும் என இந்திய எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.