ஒரே ஒருவரால் 100 பேருக்கு பரவிய கொரோனா: நீலகிரியில் பரபரப்பு
- IndiaGlitz, [Thursday,July 09 2020]
தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது அங்கு ஒரே ஒருவரால் 100 பேருக்கு கொரோனா பரவியதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊசி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த ஒருவருக்கு திடீரென கடந்த ஜூன் 16-ஆம் தேதிக்கு கொரோனா பரவியது. அவர் கடந்த 12ஆம் தேதி வரை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று உள்ளார் என்றும் அனைவரிடமும் சகஜமாக பேசி உள்ளார் என்றும் அங்கு நடந்த அனைத்து மீட்டிங்களிலும் அவர் கலந்து கொண்டுள்ளார் என்றும் தெரியவந்தது
இதனையடுத்து அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 785 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களில் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது தெரியவந்தது. இதனால் ஒரே ஒரு நபரால் அந்த தொழிற்சாலையில் உள்ள 100 பேருக்கு பரவி உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா பரவிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா என்பவர் கூறும்போது ’நீலகிரியில் கடந்த சில நாட்களாக கொரனோ தொற்று அதிகரித்து வருவதாகவும் ஊசி தொழிற்சாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரால் மட்டும் 100 பேருக்கு கொரோனா பரவி உள்ளதாகவும் இதனை அடுத்து அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த அனைத்து குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்கள் தனிமைப்படுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்திலேயே மிக குறைந்த கொரோனா பாதிப்பில் இருந்த நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது என்பதும் விரைவில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே நபரால் 100 பேருக்கு கொரோனா பரவியிருப்பது அம்மாவட்டத்தில் உள்ளவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது