கொரோனா பரவல் தடுப்பு: அரிசியோடு சேர்த்து மாஸ்க் வழங்கும் தமிழக அரசு!!!
- IndiaGlitz, [Monday,July 27 2020]
கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்துக் குடிமக்களுக்கும் இலவசமாக மாஸ்க் வழங்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி தற்போது ரேஷன் கடைகளின் மூலம் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக தலா 2 மாஸ்க் வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக பேரிடர் மீட்புக்குழு இயக்குநர், பொது சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்ட 7 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் முகக்கவசம் தயாரிப்பதற்கான டெண்டர் கோரப்பட்டு தயாரிக்கப் பட்டது. தற்போது வரை 4 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப் பட்டுவிட்டதாக தமிழக அரசு சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.
தற்போது சென்னை மாநகராட்சி தவிர மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள 69 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு மாஸ்க் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். இதற்காக 4 கோடியே 44 லட்சம் மாஸ்க்குகள் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் 2 கோடியே 8 லட்சத்து 23,076 குடும்ப அட்டைகளுக்கு 6 கோடியே 74 லட்சத்து 15, 899 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு தலா 2 மாஸ்க்குகள் என்கிற ரீதியில் 13 கோடியே 48 லட்சத்து 798 மாஸ்க்குகளை வழங்கத் தமிழக அரசு திட்டம் வகுத்து இருக்கிறது. இந்த மாஸ்க்குகள் சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்தும் தன்மையிலானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.