வெளிநாட்டுப் பயணிகளை சோதனையிடுவதில் ஏற்பட்ட குறைபாடே கொரோனா பரவலுக்கு காரணம்!!! ராஜீவ் கவுபே கருத்து!!!
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
வெளிநாடுகளில் இருந்துவந்த பயணிகளைச் சோதனையிடுவதில் ஏற்பட்ட குறைபாடே இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை அதிகமாகியிருப்பதற்கு காரணம் என்று மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபே தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பியிள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபே மாநில அரசாங்கங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளின் எண்ணிக்கைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பயணிகளின் எண்ணிக்கைக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருக்கிறது. இந்த எண்ணிக்கையில் விடுபட்ட நபர்களை கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு பின்னணியை உடையவர்களாக இருக்கின்றனர். மார்ச் 23 வரை வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளின் விவரப்பட்டியல் ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த விவரப் பட்டியல்களை வைத்துக்கொண்டு தீவிரமான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ளள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சகம், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை இதுவரை 15,24,266 என்று கணக்கிட்டு இருக்கிறது. மேலும், 775 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. 19 பேர் நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.