விடுமுறைக்காக கொரோனா வதந்தி பரப்பிய இருவர் கைது: சென்னையில் பரபரப்பு
- IndiaGlitz, [Saturday,March 21 2020]
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் கொரோனாவுக்காக விடுமுறை அளிக்க வேண்டும் என்பதற்காக கொரோனாவால் 12 பேர் இறந்ததாக வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் கார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சிவகுமார், பெஞ்சமின் ஆகிய இருவர், பூந்தமல்லி பொது சுகாதார மையத்தில் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், இதற்காக போராட்டம் செய்ய போவதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.
தமிழகத்தில் இன்னும் ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்ற நிலையில் 12 பேர் இறந்ததாக வெளியான பதிவை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை செய்து சிவகுமார், பெஞ்சமின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் கொரோனாவுக்காக விடுமுறை அளிக்கவில்லை என்றும் இதுபோன்ற வதந்தியை பரப்பினால் விடுமுறை கிடைக்கும் என்பதற்காக வதந்தி பரப்பியதாகவும் கூறினர். இதனையடுத்து அவர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.