தேர்தலுக்கு பின் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகும்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
- IndiaGlitz, [Friday,April 02 2021]
தேர்தலுக்குப் பின் சென்னையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு கடுமையாகும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையிலும் தமிழகத்தின் மற்ற பகுதியிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிறது. நேற்று மட்டும் சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தமிழகத்தில் சுமார் 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வார்டுகள் படிப்படியாக நிரம்பி வரும் நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு பிறகு சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளதை பார்க்கும் போது சென்னையில் தேர்தலுக்கு பின் கெடுபிடிகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.