திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி… தமிழ அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

கொரோனா நேரத்தில் எங்களில் பலர் வேலை இழந்து தவித்து வருவதால் தமிழக அரசு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் எனத் திருநங்கைகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து தற்போது தமிழகத்தில் திருநங்கையர் நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து திருநங்கைகளுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த அறிவிப்பின் படி 6,553 திருநங்கைகள் பலன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டை வைத்து இருக்கும் திருநங்கைகள் முன்னதாக ரூ.4,000 கொரோனா நிவாரண பெற்றிருப்பர். அவர்கள் மேலும் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் ரூ.2,000 நிவாரண நிதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கொரோனாவால் வேலை இழந்து தவித்து வரும் பொது மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரூ.4,000 நிவாரண நிதி வழங்க அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதில் முதல் தவணை நிதி ரூ.2,000 கொடுக்கப்பட்ட நிலையில் வரும் 5 ஆம் தேதி முதல் அடுத்த தவணை நிதி வழங்கப்பட உள்ளது. அதோடு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் 14 பொருட்கள் அடங்கிய சமையல் தொகுப்பும் வழங்கப்பட இருக்கிறது.