பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் மருத்துவமனை கண்ணாடியை உடைத்த கொரோனா நோயாளி
- IndiaGlitz, [Saturday,April 11 2020]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வந்த போதிலும் தமிழக அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து முடிந்தவரை கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினர்கள் கூட பார்க்க அனுமதிப்பதில்லை என்பது குறிப்படத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டதால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 27 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டில் இருந்து வந்த பிரியாணியை சாப்பிட மருத்துவர்கள் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்தார். இதனையடுத்து அவர் ஆத்திரத்தில் மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவும் பகலும் மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் நர்சுகளும் சாப்பிட கூட நேரமின்றி பணிபுரிந்து வரும் நிலையில் பிரியாணி சாப்பிட அனுமதிக்கவில்லை என்பதால் அந்த இளைஞர் மருத்துவமனை கண்ணாடியை உடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.