இளைஞருக்கு வெறுமனே 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்பா??? அதிர்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Friday,September 25 2020]

 

பொதுவாக ஒருவரது உடலில் பாதிப்பை ஏற்படுத்திய (வைரஸ், பாக்டீரியா) போன்ற நோய்க்கு எதிராக அவரது உடலில் எதிர்ப்பு ஆன்டிபாடி உருவாகி இருக்கும். அப்படி ஒரு நோய்க்கு எதிரான ஆன்டிபாடி உடலில் ஏற்பட்டால் மீண்டும் அவருக்கு அந்நோய் பாதிப்பை ஏற்படுத்தாது என மருத்துவ உலகம் நம்பியது. ஆனால் கொரோனா விஷயத்தில் இந்தக் கருத்துப் பொய்த்து போய்விட்டதை வெகு சீக்கிரமே மருத்து உலகம் உணர்ந்தும் கொண்டது.

இன்ப்ளூயன்ஸா போன்ற வைரஸ் கிருமிகள் உடலைத் தாக்கும்போது அதற்கு எதிரான எதிர்ப்பு ஆன்டிபாடி உடலில் தோன்றிவிடும். இப்படி தோன்றும் ஆன்டிபாடிகள் வருடக்கணக்காக உடலில் தங்கவும் செய்கிறது. இதனால் மீண்டும் அப்பாதிப்பு ஏற்படுவதை உடலிலுள்ள செல்களே தடுத்து விடுகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட நபருக்கு குறைந்த நாட்களே எதிர்ப்பு ஆன்டிபாடி உடலில் தங்கி இருப்பதாக விஞ்ஞானனிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

இதனால் குறைந்த ஆன்டிபாடி கொண்டவர்களுக்கு இந்நோய் மீண்டும் பாதிப்பை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவ உலகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அந்த வகையில் கேரளாவில் ஒரு வாலிபருக்கு வெறுமனே 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டும் இருக்கிறது. இதனால் அம்மாநிலச் சுகாதாரத்துறை அதிகாரிகளும் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டவர்களுக்கு உடல்வலி, சுவாசப் பிரச்சனை போன்ற கோளாறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையும் கொரோனாவால் தாக்கப்படும்போது அவருக்கு குறைவான கொரோனா அறிகுறிகளே ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் கொரோனாவில் இருந்து விடுபட்டாலும் மிகவும் எச்சரிக்கை தேவைப்படுகிறது.

தற்போது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சார்ந்த சாவியோ ஜோசப் (38) எனும் நபர் மஸ்கட்டில் வேலைப் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு சீனாவில் இருந்து திரும்பிய ஒரு நபர் மூலம் முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பாதிப்பில் இருந்த மீண்ட அவர் முதல் வேலையாக சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார். இந்நிலையில் கடந்த ஜுலை மாதத்தில் மீண்டும் அவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டு இருக்கிறது. உடனே பரிசோதித்து பார்த்தபோது கொரோனா பாசிடிவ் என வந்திருக்கிறது.

இதையடுத்து கடந்த ஜுலை 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். சிகிச்சை எடுத்துக் கொண்டதனால் ஆகஸ்ட் 11 ஆம் தேதி கொரோனா நெகடிவ் ஆக மாறியிருக்கிறது. பின்னர் வீடு திரும்பியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த மாதம் 5 ஆம் தேதி மீண்டும் கொரோனா அறிகுறியோடு பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார். பாசிடிவ் என வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. எனவே ஒருவழியாக தற்போது அந்த இளைஞர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையல் கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருவருக்கு 3 முறை கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துமா எனத் தீவிர ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.