பப்பாளி, ஆடு, இன்ஜின் ஆயிலுக்கும் கொரோனா பாசிடிவ் வருகிறது??? இப்படி சொன்னது ஒரு நாட்டின் அதிபர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் பணக்கார நாடுகளே கொரோனா நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும்போது ஆப்பிரிக்காவில் பல நாடுகள் எதையும் சட்டை செய்யாமல் “என் வழி தனி வழி” என்று பயணித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் கொரோனா பரவலின் ஆரம்பக் கட்டத்தில் பூஜ்ஜியமாக இருந்து பல ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது கொரோனா தாண்டவமாடத் தொடங்கி இருக்கிறது. நிலைமை இப்படியிருக்கும்போது ஒரு நாட்டின் அதிபர் கொரோனா பரிசோதனையே செய்ய வேண்டாம், கொரோனாவிற்கு தேவையில்லாமல் அதிக சிரத்தை எடுக்க வேண்டாம் என்று வெளிப்படையாகக் கூறிவருகிறார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டான்சானியா நாட்டின் அதிபர் ஜாக் மகுபியூலி என்பவர்தான் தற்போது கொரோனா பரிசோதனையை அதிகப் படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேசிய சுகாதார மையத்தின் இயக்குநரையும் பதவியை விட்டு தூக்கியிருக்கிறார். அதோடு நிறுத்திக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. கொரோனா பரிசோதனையே எதற்கு என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். பப்பாளி, ஆடு, இன்ஜின் ஆயில் என எந்தப் பொருளை சோதனை செய்தாலும் கொரோனா இருப்பதாக ஆய்வு முடிவு வருகிறது. இந்நிலையில் எதற்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தனது சுகாதார அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார். தற்போது அந்நாட்டில் கொரோனா எண்ணிக்கை 509 ஆக உயர்ந்து இருக்கிறது. உயிரிழப்பு 21 ஆக பதிவாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலைமை பல ஆப்பிரிக்கா நாடுகளிலும் தொடருவதாகத் தற்போது செய்திகள் வெளியாகி இருக்கிறது. பல ஆப்பிரிக்கா நாடுகளில் சுகாதாரக் கட்டமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. மேலும் அந்நாடுகளில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி, வறுமை, பஞ்சம் போன்ற பல நெருக்கடிக்கும் ஆளாகியிருக்கின்றனர். இந்நிலையில்தான் கொரோனா அந்நாடுகளில் பரவ ஆரம்பித்து இருக்கிறது. நைஜீரியா தற்போது கொரோனாவின் ஹாட்ஸ் ஸ்பாட்டாக மாறியிருப்பதாக WHO கூறியிருக்கிறது. அதேபோல சோமாலியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம். இதைத்தவிர தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்து சென்றிருக்கிறது. பார்ப்பதற்கு குறைவான எண்ணிக்கையில் கொரோனா பரவல் இருப்பதாகத் தெரிந்தாலும் அந்நாடுகள் கொரேனாவை கட்டுப்படுத்துவதில் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றன.
பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதாரமும் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. மக்களின் அடர்த்தி மிகவும் குறைவு என்பதும் நிம்மதிக் கொடுக்கும் நல்ல விஷயம். ஆனால் மோசமான சுகாதாரக் கட்டமைப்பில் அந்நாடுகள் தவித்து வருகின்றன. மேலும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணம் இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் இளம் வயதில் இருப்பவர்கள். பஞ்சம், வறுமை, நோய்த்தொற்று போன்ற பல காரணிகளால் பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆயுட்காலம் மிகவும் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல ஆப்பிரிக்க நாடுகளில் நடைமுறையில் இருந்து வந்த ஊரடங்கு தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன. குடும்ப வன்முறை அதிகரித்து இருப்பதால் சில நாடுகளில் மது விற்பனையும் தடை செய்யப் பட்டு இருக்கிறது. புகைப் பொருட்களுக்குக் கூட சில நாடுகள் தடை வித்து இருக்கின்றன. இப்படி மது, புகை போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப் படுவதால் ஆங்காங்கே கடத்தல், கள்ளச்சாராயம் போன்ற பிரச்சனைகளும் தலைத்தூக்க ஆரம்பித்து இருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி, வறுமை போன்ற காரணங்களால் பல நாடுகளின் தலைவர்கள் கொரோனாவோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள் எனக் கையை விரித்து விட்டனர். ஆனால் மக்களிடம் பல நோய்த்தொற்றைப் பற்றிய அனுபவம் இருப்பதால் ஓரளவு சமாளித்துக் கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com