சிக்கன் பிரியாணி, கேரம்போர்டு வசதி: குணமாகியும் வீடு செல்ல மறுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்!
- IndiaGlitz, [Thursday,September 10 2020]
தஞ்சையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொரனோ சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் குணம் ஆகியும் வீடு செல்ல மறுப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சையில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா மையத்தில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு காலையில் குளிக்க சூடான தண்ணீர், அதன்பின் இட்லி பொங்கல் வடை ஆகியவையும் மதியம் சிக்கன் பிரியாணி, முட்டை, தயிர் சாதம் ஆகியவையும் இரவில் இட்லி, இடியாப்பம் ஆகியவையும் சாப்பாடாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி காலை, மாலை இருவேளையும் டீ, பிஸ்கட், சுண்டல் ஆகியவையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தினமும் இரவில் இரண்டு வாழைப்பழம் வழங்கப்படுவது மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கேரம்போர்டு, செஸ் விளையாடும் வசதியும் உள்ளதால் கொரோனா நோயாளிகள் தாங்கள் சிகிச்சை பெற்று வருவதையும் மறந்து புத்துணர்ச்சி மையத்தில் இருப்பது போலவே உணர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் 50க்கும் மேற்பட்டோர் குணமாகியும் அவர்கள் வீடு செல்ல மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் இருக்கும் வசதிகளை விட கொரனோ சிகிச்சை மையத்தில் அதிக வசதியும் பொழுதுபோக்கு அம்சமும் பழகுவதற்கு நண்பர்களும் இருப்பதால் கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து அவர்கள் வீடு செல்ல மறுத்ததாக தெரிகிறது. ஆனால் குணமானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.