சென்னை மருத்துவமனையில் மீண்டும் கொரோனா நோயாளி தப்பியோட்டம்: பரபரப்பு தகவல்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 60 வயது மதிக்கத்தக்க கொரோனா நோயாளி ஒருவர் திடீரென காணாமல் போனதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சில மணி நேரம் கழித்து மீண்டும் அவராகவே திரும்பி வந்து ’தான் டீ குடிக்க சென்றதாகவும் டீ கடைகள் எதுவும் இல்லாததால் திரும்பி வந்துவிட்டதாகவும் சர்வசாதாரணமாக கூறியது அனைவரையும் அதிர்ச்சி அளித்தது. இந்த சம்பவத்தை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள் தனிப்பிரிவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் அதே ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தற்போது மேலும் ஒரு கொரோனா நோயாளி தப்பி ஓடி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய 43 வயது நபர் ஒருவருக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திடீரென ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து அந்த நோயாளி தப்பி ஓடிவிட்டதாகவும் இதனையடுத்து தப்பி ஓடிய நோயாளியை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தப்பி ஓடிய நோயாளியின் வீடு சின்மயா நகரில் அமைந்துள்ளதால் அவர் தனது வீட்டிற்கு சென்று இருக்கலாம் என்ற எண்ணத்தில் அந்த பகுதியில் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது