கொரோனா நோயாளி தப்பியதால் சென்னை மருத்துவமனையில் பரபரப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் தொடர்பால் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,.

இந்த நிலையில் கடந்த 7ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் தொடர்பால் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 24 வயது இளைஞர் ஒருவர், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று இரவு அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது. இதனை அடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் தப்பி ஓடிய கொரோனா நோயாளியை தேடி வருகின்றனர்

மேலும் இது குறித்து போலீஸார் விசாரணை செய்தபோது தப்பி ஓடிய இளைஞர் மருத்துவமனையில் உண்மையான வீட்டு முகவரியை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கோயம்பேடு தொடர்புடையவர்களால் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது கோயம்பேடு தொடர்புடைய கொரோனா நோயாளி ஒருவர் தப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது