ரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்!!! ஆச்சர்யப்பட்ட மக்கள்!!!
- IndiaGlitz, [Saturday,July 04 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் கடும் யுத்தத்தையே நடத்த வேண்டியிருக்கிறது. இதனால் கூட்டமாக இருக்கும் இடத்திற்குப் போனால் மாஸ்க் அணிந்து செல்வது, ஒருவேளை மாஸ்க் அணிவதைத் தாண்டியும் கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் அல்லாடுவது என இப்படி உலகமே அரண்டு போயிருக்கும்போது இந்தியாவில் ஒரு நபர் குதூகலமாக தங்கத்தில் மாஸ்க் செய்து போட்டுக்கொண்டு வலம் வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டத்தில் பிம்பரி சிஞ்சீவர் என்ற பகுதியில் வசிக்கும் சங்கர் குராடோ என்பவர்தான் இப்படி தங்கத்தில் மாஸ்க் செய்து அணிந்து கொண்டு இருக்கிறார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு இருக்கிறது.
மேலும் மாஸ்க்கில் சிறிய துவராங்கள் போடப்பட்டு இருக்கின்றன. இதனால் சுவாசிப்பது கடினமாக இல்லை, ஆனால் கொரோனாவில் இருந்து எந்த அளவிற்கு பாதுகாப்பை இது கொடுக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது எனவும் சங்கர் தெரிவித்து இருக்கிறார். முகக்கவசத்தை தவிர கை விரல்கள் அனைத்திலும் தங்கத்தால் ஆன மோதிரம் மற்றும் கழுத்தில் பெரிய சங்கிலி என நடமாடும் நகைக்கடையைப் போலவே இவர் காட்சி தருகிறார். ஒரு மாஸ்க் கூட விலைக்கு வாங்கி போட முடியாமல் வேட்டியையும் துண்டையும் வைத்து மறைத்துக் கொண்டு சாலையில் நடமாடும் மனிதர்களைப் பார்க்கும் போது இதெல்லாம் தேவையா என்ற கடுப்பு கூட ஒருபக்கம் வரத்தான் செய்கிறது.
ஆனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கத்தில் மாஸ்க்கா என ஆச்சர்யத்துடன் இவரைப் பார்த்து வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமூக விலகல் ஒன்றையே இப்போதைக்கு இருக்கும் பெரிய நம்பிக்கையாக பார்க்கப் படுகிறது. இதனால் மாஸ்க் கூட 85 விழுக்காடு பாதுகாப்பைத்தான் கொடுக்கும். மாஸ்க் அணிந்து, அதற்கு மேல் பிளாஸ்ட்டிக்கால் ஆன Face Mask ஐ அணிந்து கொண்டால் இன்னும் அதிகமான பாதுகாப்பை பெறலாம் என அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் நேற்று வலியுறுத்தி இருக்கிறது. சிங்கப்பூரில் 12 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்த பிளாஸ்டிக் மாஸ்க் கட்டாயமாக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.