இந்தியாவில் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் புதிய சிக்கல்!!! கவலையில் இந்திய மருத்துவக் கழகம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
வளரும் நாடுகளில் கொரோனா பரிசோதனையின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. பரிசோதனையின் அளவு குறைவாக இருப்பதால் எளிதாக நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை என்ற குற்றம்சாட்டு எழுப்பப்படுகின்ற நிலையில், தற்போது கொரோனா மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 80% மக்களுக்கு எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமலே நோய்த்தொற்றுக்கு ஆளாக்கிவிடுகிறது. இதனால் ஒருவருக்கு நோய் இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும். மேலும், இது கொரோனா பரிசோதனையில் தாமதத்தை ஏற்படுத்தும் என்றும் இந்திய மருத்துவக் கழகம் கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 100% நோயாளிகளில் 80% பேருக்கு எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை என ICMR இன் தொற்றுநோய் பிரிவு நிபுணர் ராமன் ஆர் கங்ககேத்கர் தெரிவித்துள்ளார். பெரும்பாலான நோயாளிகளுக்கு அறிகுறிகளற்ற நோய்த்தொற்று அல்லது லேசான அறிகுறி போன்ற வெளிப்பாடுகள் மட்டுமே இருக்கின்றன என்பது சிக்கலை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான பரவல் தன்மை நோயை அதிகப்படுத்தும். போலியா நோய்த்தொற்று காலத்தில் இந்திய சுகாதாரத்துறை வீட்டுக்கு வீடு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு அந்நோயைக் கட்டுப்படுத்தியது. அதைப்போல தற்போது கொரோனாவுக்கும் புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டும் என ICMR இன் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். போலியோவுக்கு வீட்டுக் கண்காணிப்பு செய்யப்பட்டதைப் போன்று கொரோனாவுக்கு செய்வது எளிதன்று எனவும் சில அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
அமைதியான பரவல் முறையில் அவர்களை அறியாமலே நோய்த்தொற்றை மற்றவர்களுக்கு பரப்பும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. முன்னதாக உலகச் சுகாதார நிறுவனம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு நோய்த்தொற்று முற்றுவதற்கு முன்பாக 2 அல்லது 3 பேருக்கு நோய்த்தொற்றை பரப்புகிறார். இந்நிலைமை நீடிக்குமானால் அடுத்த 2022 வரை சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டிவரும் எனவும் எச்சரித்து இருந்தது. தற்போது இந்தியாவில் கொரேனா நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் நோயை பரப்புவது இதேபோன்ற நிலைமையை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
நீரிழிவு நோய் மையத்தின் தலைவர் டாக்டர் அனூப் மிஸ்ரா இந்தியா போன்ற நாடுகளில் வீட்டுக்கு வீடு காணிப்பை மேற்கொள்வது மிகவும் கடினம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்கு கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவது மட்டுமே சிறந்த பயனைத்தரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் புதிய சிக்கல் உலகம் முழுவதும் ஆங்காங்கே காணப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.
அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நபர்களில் பெரும்பாலும் இளைஞர்களே அதிகமாக இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்றாலும் அவர்களுக்கு நோய் இருப்பது கண்டுபிடிக்கப் படுவதற்குள் நோயைப் பரப்பி விடுகிறார்கள். எனவே சமூக விலகல் மட்டுமே தற்போதுள்ள தீர்வு என இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் கே. ஸ்ரீநாத் ரெட்டி கூறியுள்ளார்.
இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க “பெரிய அளவிலான கொரோனா பரிசோதனையை முடுக்கிவிட வேண்டும். சமூக விலகல், தனிப்பட்ட சுகாதாரம், முகமூடிகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தும் போது நோயைக் கட்டுப்படுத்தலாம்” என உலகச் சுகாதார நிறுவனம் முன்னதாக அறிவுறுத்தியதைத் தற்போது கடைபிடிக்க வேண்டியது அவசியம் என இந்திய விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments