பள்ளிகள் திறந்த 3 நாட்களில் 150 ஆசிரியர்களுக்கு கொரோனா: அண்டை மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி!
- IndiaGlitz, [Wednesday,November 04 2020]
தமிழகத்தில் ஏழு மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் 10ஆம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் பள்ளிகளை ஜனவரி மாதம் வரை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருவதை அடுத்து தமிழக அரசு மீண்டும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது.
குறிப்பாக நவம்பர் 9ம் தேதி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்குப் பின்னரே நவம்பர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது உறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்த மூன்றே நாட்களில் அம்மாநிலத்தில் 150 ஆசிரியர்களுக்கும் 10 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் பள்ளிகள் திறந்த மூன்று நாட்களில் 160 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது தாமதமாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.