கொரோனா; பிளாஸ்மா சிகிச்சையில் வெற்றிக் கண்ட இந்திய மருத்துவர்கள்!!! அடுத்து என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா சிகிச்சையில் தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் கொரோனா பாதித்த நபர்களின் பிளாஸ்மாவை பயன்படுத்தி கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தன. இந்த சிகிச்சை முறையில் நல்லமுன்னேற்றத்தைக் கண்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது. தொடர்ந்து இந்திய மருத்துவர்களும் தற்போது பிளாஸ்மா சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் 81 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு பன்றி காய்ச்சல், சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய்களுக்கு எதிராகவும் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்படியிருந்தும் உலகச் சுகாதார அமைப்பு, பிளாஸ்மா (Convalescent Plasma theraphy) ஐ கொரோனாவுக் எதிரான மருத்துவ முறையாக அறிவிக்கவில்லை. கொரோனாவுக்கு மட்டுமல்ல எந்த வைரஸ் தொற்றுக்கும் பிளாஸ்மா சிகிச்சை முறையை WHO பரிந்துரைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேரள மருத்துவர்கள் பிளாஸ்மா மருத்துவச் சிகிச்சை முறையில் வெற்றிக் கண்டுள்ளனர், இதற்கு ICMR முறையான உத்தரவு கொடுக்கும் பட்சத்தில் தொடர்ந்து இந்த சிகிச்சை முறை இந்தியாவில் மேற்கொள்ளப்படும் எனப் பல மருத்து ஆலோசகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வந்தனர். ஆனால் இது பற்றி ICMR எந்த அறிவிப்பை வெளியிடவில்லை. உலகம் முழுவதும் பல கொரோனா நோயாளிகள் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறையில் காப்பாற்றப் பட்டிருந்தாலும் இந்த சிகிச்சை முறையை பெரிய அளவிற்கு கொண்டாடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியைக் குறித்த சில தகவல்கள்.
பிளாஸ்மாவை பற்றித் தெரிந்துகொள்வோம்
இரத்தத்தில் உள்ள ஒரு திரவப்பொருள் தான் இந்த பிளாஸ்மா. பிளாஸ்மா 60% ஆகவும் செல்கள் 40% இரத்ததில் பிணைந்திருக்கின்றன. மேலும், இரத்ததில் காணப்படும் வெள்ளை அணுக்கள்தான் இங்கு முக்கியமான பொருளாகக் கருதப்படுகிறது. காரணம் இரத்ததின் வெள்ளை அணுக்கள் போர்வீரர்கள் மாதிரி மனிதனை ஒவ்வொரு நோயில் இருந்தும் காப்பாற்றும் வல்லமைப் பெற்றது. செல்களுக்குள் வைரஸ், பாக்டீரியா போன்ற தேவையற்ற கிருமிகள் நுழையும்போது அதைத் தடுப்பதற்காக நோய்எதிர்ப்பு மண்டலங்களைச்சுரந்து இந்த வெள்ளை அணுக்கள்தான் காப்பாற்றுகின்றன.
அடிப்படையில் வெள்ளை அணுக்களில் நியூட்ரோபில்கள், லிம்போசைட்கள், மோனோசைட்டுகள் போன்ற எண்ணற்ற பொருட்கள் காணப்படுகின்றன. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது B Cell மற்றும் T Cell கள்தான். இந்த இரண்டும் மனித உடலுக்குள் நோய்க்கிருமிகள் நுழையும் போது அவற்றிற்கு எதிராக செயல்புரிந்து காப்பாற்றும் வேலைகளை செய்துவருகின்றன.
B Cell – இல் IgG, IgM என்ற முக்கியமான பொருட்கள் காணப்படுகிறது. அதே போல T Cell இல் Killer, Helper என்பவை முக்கிய பங்காற்றுகின்றன. இதுதவிர இரத்ததில் Memory cells, Macrophage போன்றவற்றின் பங்கும் முக்கியமானது. இது அத்தனையும் நோய்கிருமிகளை தடுத்து அழிப்பதில் ஒரு இராணுவப் படையைப்போல கூட்டுச்சேர்ந்து பணிபுரிகிறது.
உதாரணமாக ஒரு வைரஸ் கிருமி உடலுக்குள் நுழையும் போது முதலில் இரத்தத்தில் இருக்கும் Memory cells இந்த வைரஸ் ஏற்கனவே நமது உடலுக்குள் வந்ததுதானா? அல்லது புதியவை?? உடலுக்குள் அவசியமா? எனப் பல் தகவல்களை புரட்டிப் போட்டு பார்க்கும். ஒருவேளை உடலுக்குத் தேவையான புரதமான இருக்கும் பட்சத்தில் அதை இந்த Memory cells கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதுவே ஒரு உடலுக்கு ஆபத்தை விளைவிக்கு புதிய வைரஸாக இருக்கும்பட்சத்தில் இந்த Memory cells, இரத்தத்தில் உள்ள B Cell ஐ எச்சரிக்கை செய்கிறது. இதற்கு Helper Cells ஒற்றர்களைப்போல வேலைப்பார்க்கிறது. விஷயத்தைத் தெரிந்துகொண்ட B Cell உடனே வேகமாக வினைபுரிந்து தனது படைவீரர்களாக IgG, IgM அனுப்பி தேவையில்லாத வைரஸை அழித்துவிட்டு வரச்சொல்கிறது. இந்த IgG, IgM இரண்டும் நோய் எதிர்ப்பு மண்டலங்களை உசுப்பி விட்டு உடலில் Anti-body ஐ உருவாக்குகிறது.
இந்த நோய் எதிர்ப்பு சுரப்பிகளின் உதவியோடு Killer தேவையற்ற வைரஸ்களை கொன்று குவிக்கிறது. இறந்துபோன வைரஸ்களையும் இந்த வீரர்கள் விட்டுவைப்பதில்லை. அவற்றை Macrophage க்கு அனுப்பி வைக்கின்றன. Macrophage செயலிழந்துபோன வைரஸ்களை முற்றிலும் தின்றுவிடுகிறது. இப்படித்தான உடலில் உள்ள இரத்த நாளங்கள் நம்மை நோயில் இருந்து காப்பாற்றும் இராணுவத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது.
ஒருவேளை புதிய வைரஸ்களை உடலில் சுரக்கும் ஆண்டிபயாடிக்கால் எதிர்கொள்ள முடியாத பட்சத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றுகிறது. அதற்கு அடுத்தாற்போல பெரிய பெரிய நோய்கள் நமக்கு வருகின்றன. சாதாரண அறிகுறிகளைத் தொடர்ந்து மருத்துவமனையில் நாம் சிகிச்சை எடுத்தக்கொள்ளும்போது இரத்தத்தில் நோய் எதிர்ப்பு மண்டலங்கள் வலுப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே ஏற்கனவே உள்ள ஆண்டிபயாடிக்கோடு புதிதாக உடல் பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வைத்துக்கொண்டு நம்மை நோயில் இருந்து காப்பாற்றி விடுகிறது.
தற்போது கொரோனா வைரஸ்க்கு எதிராக நமது ரத்தச் செல்கள் இப்படித்தான் போராடிக்கொண்டிருகின்றன. கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடும் வலுவை நமது நோய் எதிர்ப்பு மண்டலங்கள் பெற்றிருக்கவில்லை. எனவே இந்த ஆற்றலை பெறுவதற்கு தேவையான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தியா அனுமதித்துள்ள Hydroxychoroquine, azithromycin போன்ற மருந்துகள் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் மரபணு இதுவரை நமது உடலில் நோய் ஏற்படுத்தாத புதிய நோய் என்பதால் இதைப் பற்றி Memory cells களுக்குத் தெரியாது. செல்களுக்குள் நுழைந்து விட்ட வைரஸ்கள் குறைந்த நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பிரதிகளை எடுத்து மற்ற செல்களுக்கும் நோயை ஏற்படுத்தி விடுகிறது. இதைக்கட்டுப்படுத்த நமது நோய் எதிர்ப்பு மண்டலங்கள் கடுமையாகப் போராடினால் அவற்றிற்கு பழக்கமில்லாத ஒரு கிருமியை எதிர்த்து போராடுவதில் சிரமம் இருக்கிறது. மேலும், வீரியம், உடல் நிலை, வயது போன்ற காரணங்கள் நோய் எதிர்ப்பு மண்டலங்களும் வலுவை இழந்துவிடுகின்றன.
பிளாஸ்மா
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட நபர்களின் பிளாஸ்மாக்கள் கொரோனாவிற்கு எதிராகப் போராடும் ஆற்றல்கொண்ட நோய் எதிர்ப்பு சுரப்பிகளை (Anti-body) தேவையான அளவு வைத்திருக்கும். அதாவது, ஏற்கனவே பாதிக்கப்பட்டு அந்நோயில் இருந்து மீண்ட நபர் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலை பெற்றிருப்பார். இந்த ஆற்றல் அவருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சையினால் கிடைக்கிறது. இப்படி சிகிச்சையளிக்கப்பட்ட நோயில் இருந்து மீண்டு வந்த நபர்களின் பிளாஸ்மாக்கள் அந்த நோய்க்கான Anti-body களை வைத்திருக்கும். இந்த Anti-body களை புதிதாக நோய் பாதித்த நபர்களின் உடலுக்குள் செலுத்தும் போது கொரோனா வைரஸை அழிப்பதற்கான தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தியை பெறமுடியும்.
ஏற்கனவே இந்த சிகிச்சை முறை ரேபிஸ், டிப்தீரியா போன்ற நோய்களுக்கு சிறந்த சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது. ஆனால் கொரோனா நோய்க்கு இந்த முறையைப் பயன்படுத்தும்போது சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. கொரோனா நோயில் இருந்து மீண்டுவந்த ஒரு நபரிடம் இருந்து 800 மில்லி அளவிற்கு இரத்தம் பெறப்படுகிறது. இந்த ரத்தத்தை வைத்துக்கொண்டு 4 நபர்களை காப்பாற்ற முடியும்.
முதலில் நோயில் இருந்து மீண்டு வந்த நபர்களை 2 வாரங்கள் கழித்து 2 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவர். அந்தச் சோதனையில் அவருக்கு முற்றிலும் நோய்த் தொற்று இல்லை எனத் தெரிந்தால் மட்டுமே இரத்தத்தை எடுக்க முடியும். அப்படி எடுக்கப்பட்ட இரத்தத்தையும் அப்படியே புதிய நபருக்கு செலுத்த முடியாது. இரத்தத்தில் இன்னும் கொரோனா நோய்க்கிருமிகள் இருக்கிறதா? வேறு நோய்த்தொற்றுகள் ஏதேனும் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்படவேண்டும். இதற்கு எலிசா சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான மருத்துவ கருவிகளுக்கு இந்தியாவில் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து, பெறப்பட்ட இரத்தத்தில் இருந்து பிளாஸ்மாக்களை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும். பிளாஸ்மாக்களைத் தவிர மீதியுள்ள ரத்தம் கொடையாளிகளின் உடலுக்குள் மீண்டும் செலுத்தப்படுகிறது. பிளாஸ்மாக்கள் செலுத்தப்பட்ட நபரின் உடலில் அது 42-72 மணி நேரங்களில் வினைபுரிகின்றன. இதற்குப் பின்னர் கொரோனா நோயை எதிர்த்து அவரது இரத்தச் செல்கள் போராடி அவரை நோயில் இருந்து மீட்கிறது.
இந்தியாவின் நிலைமை
கொடையாளிகளிடம் இருந்து பெறப்படுகின்ற பிளாஸ்மாக்கள் மற்ற உடலுக்குள் செலுத்தப்படும்போது அது சுறுசுறுப்பாகவும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு முக்கியமான ஆதாரமாகவும், செல்களில் உள்ள படைவீரர்களுக்கு உத்வேகமாகவும் இருக்கிறது. இது வெற்றிகரமான சிகிச்சை முறையாகவே பலராலும் கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இதற்கான உபகரணங்கள், வேலையாட்கள், கருவிகள், மருத்துவப் பணியாளர்கள் என அனைத்திலும் போதாமை நிலவுகிறது. முக்கியமாக இரத்ததைச் சுத்தப்படுத்தும் எலிசா சோதனையை செய்வதற்கு போதுமான கருவிகள் இந்தியாவிடம் இல்லை என்பதே நிதர்சனம்.
கொரோனாவில் இருந்து மீண்டுவந்த நபரிடம் இருந்து 2 வாரங்கள் கழித்தே ரத்தம் பெறப்படுகிறது என்றாலும் முழுவதுமாக கொரோனா வைரஸ் அவரது உடலில் அழிக்கப்பட்டு விட்டதா எனச் சந்தேகமும் எழும்புகிறது. முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் யாரிடம் கொடை பெறுவது என்ற சந்தேகம் பல நேரங்களில் தொற்றிக்கொள்கிறது. ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாக்களை பிரித்து எடுக்கும்போது கிருமிநீக்கம் முழுமையாக செய்யப்பட்டதா என்ற சந்தேகம் இன்னொரு பக்கம். அடுத்து பிளாஸ்மாக்களை பயன்படுத்தி குணமானவர்களுக்கு திரும்பவும் நோய்த்தொற்று ஏற்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரப்பூர்வமான ஆய்வு எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி பல்வேறு குழப்பங்கள் நீடிக்கும் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை தற்போதுள்ள அவசர கதிக்குப் பொருந்துமா எனப் பலநாடுகளின் அரசுகள் சிந்தித்து வருகின்றன. ஏனெனில் பிளாஸ்மாக்களை பெறுவதிலும் அதை பயன்படுத்துவதிலும் அதிக சிரத்தையும் நேரமும் தேவைப்படுகிறது. பெறப்படுகின்ற பிளாஸ்மாக்களை அனைத்து வயதினருக்கும் கொடுக்கப்பட வேண்டிய கட்டாயம் என்று எதுவும் இல்லை. நோயின் தீவிரத்தில் மாட்டிக்கொண்ட சிலருக்கு இந்த முறையை பயன்படுத்தலாம் என்றாலும் சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com