இறக்குமதி செய்யப்பட்ட கோழிக்கறியில் கொரோனாவா??? திடுக்கிடும் தவகவல்!!!
- IndiaGlitz, [Friday,August 14 2020]
உலகிலேயே சீனாதான் அதிகளவு இறைச்சியை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது சீனாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதால் பல நாடுகளில் இருந்தும் இறைச்சியை இறக்குமதி செய்ய ஆரம்பித்து இருத்திருக்கின்றனர். அப்படி பிரேசில் நாட்டில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கோழிக்கறியில் கொரோனா இருந்ததை அந்நாட்டு அதிகாரிகள் தற்போது உறுதிப் படுத்தியுள்ளனர். இதனால் சீனாவில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
பிரேசில் நாட்டின் தெற்கு மாகாணமான அரோரா அலிமென்டோசில் என்ற பகுதியில் செயல்படும் ஆலையில் இருந்து சீனாவிற்கு கோழிக்கறி இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இறைச்சிக்கறி சீனாவின் ஷென்ஷென் மாகாணத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு கோழி இறைச்சியின் மேற்பரப்பை ஆய்வு செய்த அதிகாரிகள் கொரோனா இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதனால் ஷென்ஷென் மாநகராட்சியில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை வாங்குவோர் எச்சரிக்கையாக இருக்குமாறு உள்ளூர் நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும் நீர்வாழ் உயிரினங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை வாங்குவோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அரசாங்கம் வலியுறுத்தி இருக்கிறது.
இதற்கு முன்பும் சீனாவின் பல இடங்களில் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி கறிகளில் கொரோனா இருந்ததாகப் பரபரப்பு ஏற்பட்டது. ஷான்டோங் மாகாணத்தில் யெண்டயில் பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட 3 பேக்கேஜ்களை ஆய்வு செய்தபோது கொரோனா இருப்பதை அம்மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்திருந்தனர். அதைப்போல நீர்வாழ் உணவுகளை இறக்குமதி செய்தபோதும் அவற்றில் கொரோனா இருந்ததாகச் செய்திகள் வெளியானது. ஈக்வடார் நாட்டில் இருந்து உஹு நகருக்கு கடந்த மாதம் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியிலும் கொரோனா இருப்பதை உறுதி செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.