தமிழகத்தில் மக்கள் நடமாட்டத்திற்கும் தடையா? உலவும் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்போது சற்று குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை தினம்தோறும் பாதிப்பு எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகிறது. இதனால் 24 ஆம் தேதியோடு முடிவடையும் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் சேவைக்காகத் திறந்து வைக்கப்பட்டு இருக்கும் அரசு அலுவலகங்களுக்கு மக்கள் தினம்தோறும் வந்து செல்கின்றனர். இவர்கள் மூலமாகக் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த நடமாட்டத்தைக் குறைப்பதற்கு தமிழகத்தின் அலுவலகச் சங்கங்கள் கோரிக்கை வைத்து உள்ளன.
தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் 2 வாரமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. காரணம் பொதுமக்கள் அத்யாவசியத் தேவைகளுக்கு வெளியே செல்வதை விடவும் மற்றக் காரணங்களைக் கூறிக்கொண்டு வெளியே செல்வது அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் கொரோனா பரவலில் முதல் அலைக் காலக்கட்டத்தில் இருந்ததுபோல பொதுமக்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அலுவலகச் சங்கங்கள் கோரிக்கை வைத்து உள்ளன. இதுபோன்ற விதிமுறைகளை கொண்டுவரும்போது மக்களின் நடமாட்டம் முழுவதும் குறைந்து போகும். மேலும் அரசு அலுவலகங்கள் தொடர்பான விஷயங்களை ஆன்லைன் வாயிலாக நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளது.
ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று மருத்துவ நிபுணர்கள் குழு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து எம்எல்ஏக்கள் அடங்கிய அவையில் இன்று நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருவதை தடை செய்ய வேண்டும் என்று அலுவலகச் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதுகுறித்த முடிவுகள் இன்று தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments