சிங்கப்பூரில் வேலைப்பார்த்த 4,800 இந்தியத் தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு!!!

  • IndiaGlitz, [Tuesday,May 05 2020]

 

சிங்கப்பூரில் தங்கி வேலைப்பார்த்து வரும் 4,800 இந்தியத் தொழிலாளர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய உயர் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பலானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தெற்காசிய நாடுகளில் இருந்து சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் அந்நாட்டின் தொழிலாளர்கள் விடுதியில் தங்கி வேலைப்பார்த்து வருகின்றனர்.

நெருக்கமான கட்டடிட அமைப்பு மற்றும் சுகாதாரமற்ற முறைகளில் வாழும் இத்தகைய தொழிலாளர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. விடுதிகளைத் தவிர்த்து வேறு இடங்களில் தங்கியவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படவில்லை. இந்நிலையில் விடுதிகளில் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள தொழிலாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது.

மேலும், அந்நாட்டில் பயிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு இந்தியர் அந்நாட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை சிங்கப்பூரில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. 18 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.