சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் 40 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் வேகம் எடுத்து வருகிறது. கடந்த 3 நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் கிட்டத்தட்ட பாதிபேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு உள்ள ஒரு சில ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தில் மீண்டும் கொரனோ வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியமர்த்த நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அலுவலகம் வந்து பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பாக மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.