கொரோனா அச்சம்: வாரணாசி கோவிலில் சிலைகளுக்கு அணிவிக்கப் பட்ட முகக்கவசம்!!!

 

கொரோனா பற்றிய அச்சம் கடவுளையும் விட்டு வைக்கவில்லை. தற்போது, புகழ்பெற்ற வாரணாசி சிவன் தலத்தில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் அர்ச்சகர் ஒருவர் முகக் கவசத்தை அணிவித்து உள்ளார். இது தொடர்பாக கருத்துக் கூறிய அர்ச்சகர் கிருஷ்ண ஆனந்த் பாண்டே “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விஸ்வநாதர் சிலைக்கும் முகக்கவசம் அணிவித்துள்ளோம்” எனத் தெரிவித்து உள்ளார்.

புகழ் பெற்ற வாரணாசி சிவன் தலத்தில் குளிர் காலத்தில் சிலைகளுக்கு துணிகள் அணிவிக்கப் படுகின்றன. அதே போல வெயில் காலங்களில் ஏசி மற்றும் மின்விசிறி பயன்படுத்தப் படுகின்றன. கொரோனா அச்சம் நாடு முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில் வாரணாசி கோயிலில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் முகக்கவசம் அணிவிக்க பட்டு இருக்கிறது.

இது குறித்து அர்ச்சகர் கூறும்போது, “சிலைகளைப் பொது மக்கள் யாரும் தொடக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளோம். ஒருவேளை பொது மக்கள் சிலைகளைத் தொடும்போது, வைரஸ் மற்றவர்களுக்கும் பரவிவிடும்” எனத் தெரிவித்து இருக்கிறார். வாரணாசி கோவிலில் ஸ்வாமி தரிசம் செய்யும் பக்தர்களும் முகக்கவசத்தை அணிந்தபடியே தரிசனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.