கொரோனா; அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதுகூட பிரச்சனையா???

  • IndiaGlitz, [Thursday,April 09 2020]

 

உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சை பற்றிய ஆராய்ச்சிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழல்நிலையில் தற்போது “சைட்டோகைன்“ என்ற புதிய புயலை மருத்துவர்கள் கிளப்பியிருக்கின்றனர். கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்தே, நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்களால் எளிதில் நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளமுடியும் எனவும், இதனால் வயதானவர்களை அதிக பாதுகாப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதன்பொருள் இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது, எனவே கொரோனா நோய்த்தொற்று அவர்களை விரைவில் தாக்காது அல்லது நோய்த்தொற்று ஏற்பட்டாலும் அவர்கள் உயிர்பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை அளிக்கப்பட்டு வந்தது. இந்த தைரியத்தில் பல இளைஞர்கள் தங்களுக்கெல்லாம் கொரோனா வைரஸ் பரவாது என வெளியே சுற்றியும் திரிகின்றனர். மற்றொரு பக்கம் வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கு கை வைத்தியங்களிலும் ஈடுபட்டனர்.

ஆனால் தற்போது, கொரோனா நோய் சிகிச்சையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதும் ஒரு பிரச்சனைதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை சைட்டோகைன் ஸ்ட்ரோம் சிண்ட்ரோம் (சி.எஸ்.எஸ்) என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். பொதுவாக மனிதர்களுக்கு, புதிதாக ஒரு நோய் ஏற்படும்போது அதைச் சீர்ப்படுத்துவதற்கு உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகளவு சுரக்கிறது. காலப்போக்கில் சுரப்பிகளின் அளவு படிப்படியாக குறைந்து போகிறது. ஆனால் ஒவ்வொரு நோயின் பாதிப்பிலும் இந்த நோய் எதிர்ப்பு மண்டலங்கள்தான் மனிதனைக் காப்பாற்றி வருகிறது.

தற்போது, கொரோனா பாதிப்பில் சில இளைஞர்களுக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலங்களே எமனாக இருப்பது தெரியவந்திருக்கிறது. பாரிஸில் கொரோனா பாதித்த 42 வயது நபர் நுரையீரல் வீக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, அவரது நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகளவில் சுரந்து நுரையீரலில் கட்டிகளை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது. இந்தக் கட்டிகளால் சுவாசம் தடைப்பட்டு உடல்நிலை மோசமானது. இந்தத் தன்மையை மருத்துவர்கள் “சைட்டோகைன்” எனக் குறிப்பிடுகின்றனர்.

சீனா மற்றும் இத்தாலியில் கொரோனா பாதித்த பல இளைஞர்களுக்கு இந்த சைட்டோகைன் பாதிப்பு இருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும், சிகிச்சையின்போது அவர்களுக்கு Tocilizumab மருந்து கொடுக்கப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்பட்டது. பர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ராண்டி கிரான் “பெரும்பாலான நோய்களில் மனிதர்களை அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலங்கள் தான் காப்பாற்றுகின்றன. ஆனால் சில சந்தர்ப்பங்களில் 15% மக்கள் அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலங்களின் வீரியத்தால் இறந்துபோகின்ற அபாயமும் ஏற்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். இதனால் சிலருக்கு நோய்ப்பாதிப்பு நின்றபோதும் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்திகள் சுரக்கின்றன என்பது தெரியவருகிறது.

இப்படி அதிகமாகும் சுரப்பிகள் கட்டிகளை உருவாக்கி நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளை நேரடியாகத் தாக்குகின்றன. மேலும், அதிகரிக்கும் சுரப்பிகளால் அவர்களுக்கு சோர்வும் ஏற்படுகிறது. சில நேரங்களில் மரணங்களும் நிகழ்கின்றன. நோய் எதிர்ப்பு மண்டலங்கள் அதிகளவு சுரக்கும் நேரங்களில் அதைக் கட்டுப்படுத்த Tocilizumab ஐ மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது கொரோனா பாதித்து சைட்டோகைனால் அவதிப்பட்ட நபருக்கு ஐரோப்பாவில் உள்ள Gustave Roussy மருத்துவமனையில் Tocilizumab மருந்து கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த மருந்து பலனளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலைமைகளைப் பார்க்கும்போது சைட்டோகைம் பாதிப்பும் நபர்களுக்கு நபர் வேறுபடும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

தற்போது, உலகம் முழுவதும் சைட்டோகைன் என்ற வார்த்தை பெரும் அளவிற்கு பயன்படுத்தப்பட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை கையாள்வதற்கு முறையான பயிற்சியை மருத்துவர்கள் பெற்றிருக்கவில்லை என்றே கூறப்படுகிறது. பொதுவாக சைட்டாகைன் நோயாளிகள் உயர் இதயத்துடிப்பு ,காய்ச்சல், குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். கவனிக்கத் தவறிய சைட்டோகைன் கட்டிகள் சில நேரங்களில் புற்றுநோயையும் உண்டாக்கி விடும் அபாயம் இருக்கிறது.

சைட்டோகைனால் உடலில் சுரக்கும் அதிக புரதத்தைக் கண்டுபிடிக்க Ferritin என்ற சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இதில் இருந்து தப்பிக்க Anakinra, hydroxychloroquine போன்ற மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. hydroxychloroquine முழுநோய் எதிர்ப்பு சக்தியையும் பரவலாக்குவதற்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மேலும், அதிக நோய் எதிர்ப்பு சதியால் உண்டாகும் உற்சாகத்தை இந்த மருத்து கட்டுப்படுத்தவும் செய்கிறது.

கொரோனா பாதிப்பில் சைட்டோகைன் நோயாளிகள் பற்றிய அளவு இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால் 1918 ஆம் ஆண்டு பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலின்போது உலகம் முழுவதும் 5 கோடி உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பிற்கு சைட்டோகைன் முக்கிய காரணமாக இருந்தது எனவும் மருத்து வரலாறு குறிப்பிடுகிறது.