உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் கொரோனா நடனம்

 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு அரசாங்கமும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் தற்போது சமூக வலை தளங்களும் தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை செலுத்தி வருவது வரவேற்கத் தக்கதாக இருக்கிறது.

கொரோனா நோய் பரவலைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம், தனி டிவிட்டர் பக்கத்தினை தொடங்கி அதில் பல தகவல்களை உலகம் முழுவதும் பரப்பி வருகிறது. தவறான வதந்திகளைத் தடுக்கும் வகையிலும் உலக சுகாதார நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் செல்போன் அழைப்புகளின் போது கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களை ஒலிபரப்புமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த அறிவுரையின் படி தற்போது வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு அழைப்புகளிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளைக் கேட்க முடிகிறது. கொரோனாவை பற்றிய மீம்ஸ்களும் இந்தியாவில் கலைக் கட்டியிருகிறது.

தற்போது, இணையத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையிலான எச்சரிக்கை நடனம் ஒன்று உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வியட்நாமில் உள்ள குவாங் டன் என்ற நடன கலைஞரால் உருவாக்கப் பட்ட இந்த வீடியோவில் எப்படி கை கழுவுவது , வாய், மூக்கு, கண்களை தொடமல் இருப்பது, கூட்டத்தில் நிற்காமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு செயல்பாடுகள் விளக்கப் பட்டு உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இசையும் நடனமும் மக்களுக்குத் துணையாக இருக்கும் எனவும் நடனக் கலைஞர் குவாங் டன் தெரிவித்து இருக்கிறார். இந்த கொரோனா விழிப்புணர்வு வீடியோ உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.