அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு தெருக்களில் வீசப்படும் கொரோனா பிணங்கள்!!! ஈக்வடார் சந்தித்துவரும் நெருக்கடி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத ஈக்வடார் கொரோனா பாதிப்பினால் கடும் நெருக்கடி நிலைமையை சந்தித்துவருகிறது. சுகாதார நிலைமைகள் மேம்படுத்தப்படாத ஈக்வடாரின் மேற்கு நகரமான குயாவிலியில் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே வருகின்றன. அந்நகரத்தில் சுமார் 2.99 மில்லியன் மக்கள் வாழுகின்றனர். ஆனால் முக்கிய தெருக்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிடத்தப்பட்டு அகற்றப்படாமல் அப்படியே விட்டுவைக்கப்பட்டு இருக்கிறது.
காரணம் குயாவிலி நகரத்தில் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள் எதுவும் இல்லை. கொரோனா நோய்த்தொற்றினால் இதுவரை அந்நாட்டில் 3,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 என அந்நாட்டு சுகாதாரத்துறை கணக்குக் காட்டுகிறது. ஆனால் உண்மை நிலவரம் இதுவல்ல என மக்கள் கடும் குற்றம்சாட்டி வருகின்றனர். குயாவிலி நகரத்தின் முக்கியத் தெருக்களில் மட்டும் மார்ச் 23-30 ஆம் தேதி வரை சுமார் 300 பிணங்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்து இருக்கிறது. இதை தேசியப் புள்ளிவிவரங்களும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், கொரோனாவிற்காக அமைக்கப்பட்ட இராணுவ பணிக்குழுவின் ஜெனரல் ஜார்ஜ் வாட் கடந்த 3 தினங்களில் மட்டும் சுமார் 150 பிணங்கள் மீட்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கணக்குகளைப் பார்க்கும்போது இறப்பு எண்ணிக்கை பல மடங்காக இருக்கும் என ஊகிக்க முடிகிறது.
அந்நரகத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். காரணம் படுக்கைகள் எதுவும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் தங்களது சொந்த வீடுகளிலே தனிமைப்படுத்தப்படுகின்றனர். சிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பே அந்நகரத்தில் பலர் இறந்து விடும் அவலம் நிகழ்ந்துவருகிறது. மேலும், கொரோனா பாதிப்பு இருக்கிறதா எனப் பரிசோதிப்பதற்காக மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறையும் இருந்து வருகிறது. எனவே பலர் கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா எனப் பரிசோதனை செய்வதற்கு முன்னமே இறந்து விடுகின்றனர்.
இப்படி இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கு சுகாதாரத்துறை நெடும் நேரம் எடுத்துக்கொள்வதால் மக்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர். இறந்தவர்களை வீடுகளில் வைத்துக்கொள்ள முடியாத சூழலில் தெருக்களில் வீசிவிடுகின்றனர். பல நாட்கள் கடந்த நிலையில் சிலர் தெருக்களில் வைத்து அப்படியே எரிக்கவும் செய்கின்றனர். இன்னும் சில வாகனங்கள் இறந்தவர்களை கொண்டுவந்து போட்டு விட்டு போய்விடுவதாகவும் சிஎன்என் ஊடகம், வீடியோக்களில் பதிவு செய்திருக்கிறது. பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டும், அடைப்பெட்டிகளில் சுற்றப்பட்டும் வீசப்படும் கொரோனா பிணங்களால் நோய்த்தொற்று பரவுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றது, எனவே மக்கள் தங்களது பாதுகாப்புக்காக தொடர்ந்து காவல் துறையினரையும் சுகாதாரத் துறையினரையும் தொலைபேசியில் அழைத்தபடியே இருக்கின்றனர்.
ஏப்ரல் 2 ஆம் தேதி ஒரு பெண் தனது கணவர் இறந்து நான்கு நாட்கள் ஆகிறது. அவரது உடலை அடக்கம் செய்ய உதவுங்கள் என ஊடகத்துறையினரைப் பார்த்து கதறியிருக்கிறார். வீடுகளில் தனித்து விடப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகளால் அங்கு சிகிச்சை அளிக்கச் செல்லும் மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று பரவிவிடுகிறது. நிலைமையைக் கட்டுக்குள் வைப்பதற்கான எந்த பொருளாதார வசதியும் இல்லாத ஈக்வடார் தத்தளித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments