உங்களை கெஞ்சிக் கேட்கிறேன்...! உருக்கமாக பேசிய முதல்வர்...!
- IndiaGlitz, [Monday,May 24 2021]
கொரோனாவை பிறருக்கும் தர மாட்டோம், யாரிடம் இருந்தும் பெற மாட்டோம் என மக்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் தான், மக்கள் சலுகைகளை பயன்படுத்தி வெளியில் சுற்றித்திரிந்தார்கள். இதனால் தான் தற்போது தளர்வுகள் அல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என முதல்வர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தினசரி பாதிப்பு என்பது, 35 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தக்கொடும் தொற்றை தடுக்கும் நோக்கில், மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அத்தியாவசியக் கடைகள் தவிர, மற்றவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் முக.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது,
முதல்வராக பதவியேற்ற 2 வார காலத்தில், அரசு சார்பாக ஏராளாமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் பயணிக்க நடவடிக்கை, ஆவின் பாலின் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, கொரோனா நிவாரணமாக அரசி அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்குதல், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட திட்டங்களை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
மேலும் கொரோனா பணிகளுக்காக தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில், கடந்த 2 வாரத்தில் மட்டும் சுமார் 17 ஆயிரம் படுக்கைகள் நிறுவப்பட்டுள்ளது. 30 இயற்கை மையங்கள் திறக்கப்பட்டும், மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் தேவையும் தீர்க்கப்பட்டுள்ளது. கொரோனா பணிகளுக்காக 2,100 மருத்துவர்களும் 6,000 செவிலியர்களும் நியமிக்கப்படவுள்ளதாக, அரசு சார்பாக கூறப்பட்டுள்ளது.
முன்பு விதிக்கப்பட்ட தளர்வுகளை மக்கள் சலுகையாக எடுத்துக்கொண்டதால் தான் , தற்போது தளர்வுகள் அல்லாத கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா சங்கிலியை உடைத்தெறிய ஊரடங்கை தவிர வேறு வழியே இல்லை. கொரோனாவை யாருக்கும் தர மாட்டோம், யாரிடம் இருந்தும் பெற மாட்டோம் என்பதை பொதுமக்கள் உறுதிமொழியாக எடுத்துக்கொண்டு, கசப்பு என்ற ஊரடங்கை, கட்டாயமாக அருந்தியே ஆக வேண்டும் என்றும் மக்களிடம் உருக்கமாக பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர்