“கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியவில்லை”!!! வீட்டிற்குள் இருக்குமாறு மக்களை எச்சரித்த மகாராஷ்டிரா முதல்வர்!!!

  • IndiaGlitz, [Saturday,May 09 2020]

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இந்நிலையில் அதிகப் பாதிப்பு உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து முன்வரிசையில் இருக்கிறது. இதுவரை அம்மாநிலத்தில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,089 பேர் புதிதாகப் பாதிக்கப் பட்டிருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்திய அளவில் இதுவே முதல் அதிக பாதிப்பு எண்ணிக்கையாகும். மேலும் உயிரிழப்பு 37 ஆக அதிகரித்து இருக்கிறது.

இதுகுறித்து மக்களிடம் கருத்துத் தெரிவித்த அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, “மாநிலத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியவில்லை. எனவே மக்கள் அனைவரும் முழு முடக்க (Lockdown) நடவடிக்கையின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும், அனைவரும் வீட்டிற்குள்ளே பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக மும்பை நகர மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த பிணங்களுக்கு நடுவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது பற்றி கடும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அதுகுறித்தும் கருத்துத் தெரிவித்த முதல்வர் இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மும்பை நகரத்து பாதுகாப்புகளுக்கு இராணுவத்தை வரவழைப்பதாக அம்மாநிலத்தில் வதந்திகள் கிளம்பியது. இதுகுறித்து பேசிய முதல்வர், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவம் வரவழைக்கப்படாது. வேண்டுமானால் மத்திய அரசின் மனித வளத்துறையிடம் இருந்து உதவிகள் பெறப்படும் என்றும் இது கடுமையாக உழைத்து வரும் காவல்துறைக்கு சற்று ஓய்வு கொடுக்கும் விதமாக அமையும் எனவும் விளக்கம் அளித்தார். மனித வளத்துறையிடம் உதவிக்கோருவது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைத்து விடுவது என்ற பொருளில் அல்ல, பல காவல் துறையினர் நீண்ட நாட்களாக உழைத்து வருகின்றனர். சிலர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறிய அளிவிலான ஓய்வு கொடுக்கும் நடவடிக்கையில் இந்த ஏற்பாடுகள் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மே 17 ஆம் தேதிக்குப் பிறகு அம்மாநிலத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நடந்துகொள்வதைப் பொறுத்து இந்த விதிமுறைகள் அமையும் எனவும் விளக்கம் அளித்துள்ளார். இதற்கு முன்னதாக, மகாராஷ்டிரா கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அக்கறையுடன் செயல்படும் பகுதியாக இருக்கிறது. எனவே மகாராஷ்டிராவிற்கு உதவிசெய்ய தயாராக உள்ளோம் என்று மத்திய அரசின் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.