கடும் சர்ச்சையை ஏற்படுத்திய கொரோனா அணுகுமுறைகள்!!! இந்தியாவில் இது சாத்தியமா???
- IndiaGlitz, [Friday,May 15 2020]
கொரோனா பரவல் தடுப்புக்காக சில நாட்கள், இந்திய மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியிருந்தோம். இந்நிலையில் மே 17 க்கு பின் என்ன நடவடிக்கை தொடரப் போகிறது என்பதை பிரதமர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் ஊரடங்கு நீடிப்பு இருக்காது எனவும் பலத் தரப்புகளில் இருந்து கூறப்பட்டு வருகிறது. இந்த முடிவு சரியா? தவறா? என்று விவாதங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் சுவீடன் நாடு இதுவரையிலும் ஊரடங்கை அறிவிக்கவில்லை. எனவே ஊரடங்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்ற குரலும் ஒருபக்கம் வலுத்து வருகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பல நாடுகள் இந்த உலகிற்கே உதாரணமாக இருந்து வருகிறது. சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் எல்லையைப் பகிர்ந்து கொண்டு வரும் ஒரு நாடு வியட்நாம். அந்நாட்டில் கொரோனா முற்றிலும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத சுவீடனில் கொரோனா பலி எண்ணிக்கை குறைவு. இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில் மாற்றம் தேவை என்ற குரலும் ஓங்கியிருக்கிறது.
கொரோனா ஊரடங்கினால் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலுமே பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து இருக்கிறது. இந்நிலையில் சிறு, குறு தொழில்களைத் தொடங்க மத்திய அரசு புதிய கடன்களை வழங்க முன்வந்திருக்கிறது. சரிந்த பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டுமானால் நிவாரணத் தொகையை கூட்டிக்கொடுக்க வேண்டும் என்று Imf பரிந்துரை செய்கிறது. இந்தப் பரிந்துரையை ஏற்று உலக நாடுகள் ஹெலிகாப்டர் மணியை தங்களது மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்கி வருகின்றன. மேலும் பல நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக பாதிப்பு கொண்ட அமெரிக்கா ஊரடங்கை தளர்த்தியிருக்கிறது. உலகச் சுகாதார அமைப்பும் கொரோனா நோய்த்தொற்றை முழுவதுமாக அழிக்க முடியாது, நோய்த்தொற்றோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என கருத்துக் கூறியிருக்கிறது. இந்திய அமைச்சர்கள் நிதிட் கட்கரி மற்றும் லவ் அகர்வால் ஆகிய இருவரும் இதே கருத்தை கூறியிருக்கின்றனர்.
இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தி வந்தாலும் தொடர்ந்து மாதக்கணக்கில் ஊரடங்கை அமல்படுத்த முடியாது. வறுமையினால் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்து போகும் அபயாத்தை இது ஏற்படுத்தி விடும் என்ற அறைகூவலும் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது. ஒருவேளை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பு பாதிப்பு அதிகமாக இருக்குமோ என்ற அச்சமும் ஒருபக்கம் அதிகரித்து இருக்கிறது. எனவே ஊரடங்கு தளர்த்தல் இந்தியாவில் எப்படியிருக்கும் என்ற கேள்வி பொது மக்கள் மத்தியிலும் ஆர்வம் கொண்ட ஒரு கேள்வியாக மாறியிருக்கிறது. எது எப்படியானாலும் தற்போது இந்திய மக்கள் ஊரடங்கு விலக்கலுக்கு தயாராகி வருகின்றனர்.
சுவீடன் நாட்டில் உள்ள நோய்த்தொற்று நிபுணர் ஜோஹன் கீசெக் கருத்துதான் அந்நாட்டின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் செல்வாக்கு செலுத்தி வருகிறது. அதாவது கொள்ளைநோய், பெருந்தொற்று காலங்களில் அதுவும் கொரோனா போன்ற தடுப்பூசியே கண்டுபிடிக்கப்படாத தொற்று நோய் காலங்களிலும் சமூக தொற்றை அதிகரிப்பது ஒன்றே வழி என வலியுறுத்துகிறார். தொற்று பரவிடக் கூடாது எனப் பல நாடுகள் சமூக விலகலை அறிவுறுத்தி வரும் நிலையில் சமூகத் தொற்றை அதிகரிக்குமாறு ஒரு நாடு பரிந்துரை செய்கிறது. இது ஆபத்தான அணுகுமுறையாக தெரிந்தாலும் சுவீடன் இதைத்தான் பின்பற்றி வெற்றி பெற்றிருக்கிறது. அதாவது அந்நாட்டில் உள்ள 60 விழுக்காடு மக்களை இந்நோய்த் தொற்று பாதித்து விட்டால் நோய்க்கு எதிரான வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றலை பெரும்பாலான மக்கள் பெற்று விடுவார்கள். பின்பு இந்நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பதே அந்த புதிய அணுகுமுறை. இந்த எல்லையும் அந்நாடு அடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 60 விழுக்காடு மக்களை கொரோனா நோய்த்தொற்று ஏற்கனவே பாதித்துவிட்டது. வயதானவர்களை மட்டும் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தும் அந்நாட்டு அரசு அனைத்து வணிக நிறுவனம், மால்கள், தியேட்டர்கள், சாப்பாட்டுக் கடைகள், இரவு நேர விடுதிகள் அனைத்தையும் திறந்தே வைத்திருக்கிறது. குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகளோடு தற்போது கொரோனாவுக்கு எதிரான வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றலை அந்நாட்டு மக்கள் பெற்றிருப்பதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் மகிழ்ச்சித் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நடைமுறை இந்தியாவிற்கு பொருந்துமா என்ற கேள்விதான் தற்போது முக்கியமானது.
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றாலும் இறப்பு விகிதம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இந்தியச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். சில விஞ்ஞானிகளும் “இந்தியர்களுக்கு இயல்பிலேயே நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கிறது” என விளக்கம் அளித்துள்ளனர். இந்த கருத்துகளைப் பார்க்கும்போது ஊரடங்கு விலக்கல் பெரிதான ஆபத்தை கொடுக்காது என்றே பலரும் கூறிவருகின்றனர். ஆனாலும் சில விஞ்ஞானிகள் ஊரடங்கிற்குப்பின் பாதிப்பு எண்ணிக்கை அதிகமானால் மீண்டும் ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி வருகின்றனர். இதற்கு பிரிட்டன் மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது.
லண்டனில் உள்ள இம்பீரியல் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த நீல் பெர்குசன் தலைமையிலான ஆய்வுக்குழு அந்நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக பல பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி வருகிறது. முதலில் கொரோனா தடுப்புக்காக பிரிட்டரினில் எந்த ஊரடங்கும் அமல்படுத்தப் படவில்லை. இந்த ஆய்வுக்குழு கொரோனா பாதிப்பினால் பிரிட்டனில் 5 லட்சம் பேர் இறப்பார்கள் என்றும் அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை 22 லட்சத்தைத் தாண்டும் எனவும் கணித்து கூறியது. இந்த எண்ணிக்கையை கண்டு அலறிய அந்நாட்டு சுகாதாரத்துறை உடனடியாக ஊரடங்கை அமல்படுத்தியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பும் இந்த கணிப்பை ஏற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த ஆய்வுக்குழு பெரும்பலானவர்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லாமலே நோய்த் தாக்கும் எனவும் கூறியது.
இந்தக் கணிப்புகளைப் பார்த்த சுவீடன் நாட்டு ஆலோசகர் கீசெக், பிரிட்டன் ஆய்வுக்குழுத் தலைவர் பெர்குசனை கடுமையாக கண்டித்தார். இதனால் இருவருக்கும் விவாதப்போரே நடந்தது. ஆக ஊரடங்கு தளர்த்தல் என்பது இருப்பக்க முனை உள்ள கத்தி மாதிரி. ஒருபக்கம் கடுயைமான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஊரடங்கு தளர்த்தவில்லை என்றால் பொருளாதாரம் சீரழிந்து அதனால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். எனவே ஊரடங்கு என்ற ஆயுதத்தை மக்களும், அரசுகள் மிகவும் கவனமாக உபயோகிக்க வேண்டும் என்பதே பல சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.