ஊரே போராட்டம் செய்தும் மூட முடியாத மதுக்கடையை ஒரே ஒரு கொரோனா நோயாளி மூடிய அதிசயம்
- IndiaGlitz, [Friday,May 08 2020]
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் அரசே மதுக்கடைகளை திறந்துவிட்டதற்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரியலூரில் கடந்த சில நாட்களாக கோயம்பேடு தொடர்பு உடையவர்களால் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மதுக்கடைகளை திறந்ததற்கு அந்த பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அருகே கோட்டியால் பாண்டிபஜார் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை உடனடியாக மூடவேண்டும் என அந்த பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தினர்.
இந்த நிலையில் இந்த மதுக்கடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்று மதுபானம் வாங்க வந்ததாக செய்தி பரவியதால் அந்த கடைக்கு மதுவாங்க வந்திருந்த மதுப்பிரியர்கள் மற்றும் அந்த பகுதி பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி மோகன்தாஸ் அந்த மதுக்கடையை மூட உத்தரவிட்டார்.
பெண்கள் உள்ளிட்ட பலர் மதுக்கடையை மூட வலியுறுத்தியும் மூடப்படாத டாஸ்மாக், ஒரே ஒரு கொரோனா நோயாளி மதுவாங்கியதாக வந்த தகவலால் உடனடியாக மதுக்கடை மூடப்பட்டதை அந்த பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து வருகின்றனர்.