கொரோனா 3-ஆம் அலை எப்படி இருக்கும்...? முக்கிய தகவலை வெளியிட்ட மத்திய அரசு மூத்த அதிகாரி...!
- IndiaGlitz, [Saturday,May 08 2021]
கொரோனாவின் மூன்றாம் அலை எப்படி இருக்கும் என்பது குறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா நடவடிக்கைகளை உறுதியாக அமல்படுத்தினால், கொரோனா 3-ஆம் கட்ட அலையை தடுக்கலாம் என மத்திய அரசின் மூத்த அதிகாரியான முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் கூறியுள்ளார்.
கொரோனாவின் 2-ஆம் அலை மக்களை கொடூரமாய் தாக்கி வருகிறது. இந்த வருடம் பாதிப்புகளை காட்டிலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதைத்தொடர்ந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் மூத்த அதிகாரியான முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன், டெல்லி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியிருப்பதாவது,
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் காலத்தில் நாடு முழுவதும் உறுதியான தடுப்பு நடவடிக்கைகளை பிறப்பித்து, மக்கள் அதை பின்பற்றினாலே போதும். கொரோனாவின் 3-ஆம் கட்ட அலை வராமல் நம்மால் தடுக்க இயலும். உள்ளூர் நிர்வாகிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு அமல்படுத்துகின்றன என்பதை பொறுத்தும் தொற்று பரவுவதை தடுக்கலாம் என அவர் கூறினார்.
சில நாட்களுக்கு முன் 3-ஆம் கட்ட அலை குறித்து விஜயராகவன் கூறியது,
வரும் நவம்பரில் மூன்றாம் கட்ட அலை ஏற்படும், இந்த கொரோனா குழந்தைகளை பெருமளவில் பாதிக்கும் என கூறியிருந்தார். கொரோனா மூன்றாம் அலை துவக்குவதற்கு முன்பே, அதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.