டாக்டரை கயிற்றால் கட்டி தரதரவென இழுத்து சென்ற போலீசார்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Sunday,May 17 2020]
ஆந்திராவில் டாக்டர் ஒருவரின் கைகளை கயிற்றால் கட்டி தரதரவென போலீசார் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுதாகர் என்ற டாக்டர் சமீபத்தில் டாக்டர்களுக்கான மாஸ்குகள் பற்றாக்குறை ஏற்பதாக புகார் அளித்தார். ஒரே மாஸ்க்கை 15 நாட்கள் பயன்படுத்த சொல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார் இதனையடுத்து அவர் பொய்யான தகவலை பரப்புவதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் நின்றுகொண்டு அரசுக்கு எதிராக ஆவேசமான சில கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரை கண்ட்ரோல் செய்ய முயன்றதாகவும் ஆனால் கான்ஸ்டபிள் ஒருவரின் மொபைல் போனை எடுத்து அவர் தூக்கி எறிந்து அராஜகம் செய்ததாகவும் இதனை அடுத்து அவருடைய கைகளை கட்டிய போலீசார் தரதரவென இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. டாக்டர் என்றும் பாராமல் அவரை கயிற்றால் கட்டித் தரதரவென இழுத்துச் சென்ற போலீசாரின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து போலீஸ் கமிஷனர் மீனா அவர்கள் விளக்கம் அளித்தபோது டாக்டர் சுதாகர் சாலையில் அநாகரீகமாக நடந்து கொண்டு பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருந்ததாகவும், போலீசார் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் அவர் மிகவும் ஆவேசமாக நடந்து கொண்டதாகவும் இதனை அடுத்து வேறு வழியின்றி அவரிடம் இது மாதிரி நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் மன அளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதற்கான பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.