திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!! இப்படியும் மனிதர்கள்…
- IndiaGlitz, [Wednesday,September 23 2020]
நாகரிக வளர்ச்சி குறித்து பக்கம் பக்கமாகப் பேசும் நம்முடைய சமூகம் பெண்களுக்கான பாதுகாப்பில் மட்டும் எப்போதும் கோட்டை விட்டு விடுகிறது. அதனால்தான் இந்தியாவில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதை ஊடகங்களில் பார்க்க முடிகிறது.
திருச்சி அரசு மருத்துவமனை பிளார்ட் பாரத்தில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவரை சிலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறுப்படுகிறது. கடந்த 17 ஆம் தேதி காவல் துறையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு பிளார்ட் பாரத்திற்கு அருகில் 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும் மேலும் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அப்பெண்ணை அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்ற அப்பெண்ணை இளைஞர்கள் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கின்றனர். பின்பு அடுத்த நாள் காலை அதே இடத்தில் மீண்டும் அப்பெண்ணை இறக்கிவிடவும் செய்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அப்பெண் கடுமையான வலியில் துடித்து இருக்கிறார். இதைப் பார்த்த இளைஞர் ஒருவர் பெண்கள் பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் கொடுத்ததோடு காவல் துறையினரையும் நாடியிருக்கிறார்.
பெண்கள் அமைப்பினர் அப்பெண்ணை மீட்டு தற்போது சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரை போலீசார் தற்போது கைது செய்து இருக்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றுகூட பாராமல் இளைஞர்கள் செய்த செயல் பலரையும் கோபப்பட வைத்திருக்கிறது.