பணியில் இருந்த போலீசுக்கே சரமாரி கத்திக்குத்து? அதிர்ச்சி வீடியோ!!!

  • IndiaGlitz, [Friday,January 08 2021]

டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த போலீசார் ஒருவரை குற்றவாளியான ஒரு நபர் சரமாரியாக கத்தியால் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் போலீசுக்கே பாதுகாப்பில்லாத நாட்டில் நமக்கு ஏது பாதுகாப்பு என்பது போன்ற கருத்துகளையும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியின் திலக் நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை 7.30 மணிக்கு கான்ஸ்டபிள் முகேஷ் மற்றும் அவருடன் தீபக் என இரு போலீசார் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது கொள்ளை மற்றும் ஆயுத வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சாகர் என்பவர் அவர்களுடன் ஏதோ பேசுகிறார். பின்னர் முகேஷை நோக்கி சரமாரியாக கத்தியால் குத்துகிறார். இதனால் முகேஷ்க்கு தோள் பகுதி மற்றும் அடி வயிற்றில் பலமான கத்திக் குத்து ஏற்படுகிறது. அதோடு சாகர் முகேஷின் துப்பாக்கியை பிடுங்கவும் முயற்சிக்கிறார்.

அப்போது கான்ஸ்டபிள் முகேஷ் தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுடுகிறார். அதன் ஒரு குண்டு சாகர் மீது படுகிறது. இப்படியாக அந்த சண்டை ஒரு முடிவுக்கு வருகிறது. இதையடுத்து குண்டடிப்பட்ட சாகர் நல்ல உடல் நிலையுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் கத்துக்குத்து பட்ட கான்ஸ்டபிள் முகேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் இச்சம்பவம் குறித்த இந்த வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை செய்யப்படும் எனவும் டெல்லி காவல்துறை உத்தரவாதம் அளித்து உள்ளது.