கத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்....! ஆனால் கோவைக்கு ரெட் அலார்ட்..!
- IndiaGlitz, [Saturday,May 15 2021]
கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
தெற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தான், தற்போது தத்தே புயலாக உருவாகியுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்துள்ள, கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து மாவட்டமே குளிர்ச்சியாக உள்ளது.
ஆனால் இங்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியதை தொடர்ந்து, 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று கோவைக்கு வந்துள்ளனர்.
தெற்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தத்தே புயலாக மாறியுள்ளதால், கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து 4 நாட்களுக்கு, கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரக்கோணத்திலிருந்து கோவை வந்தடைந்த 54 நபர்கள் கொண்ட, 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் ராமநாதபுரம் மாநகராட்சி திருமணமண்டபத்தில் தங்கியுள்ளனர். மழை நேரம் என்பதால் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.