கொரோனா விஷயத்தில் பெருத்த அவநம்பிக்கை- சில திடுக்கிடும் தகவல்கள்!!!
- IndiaGlitz, [Wednesday,September 09 2020]
கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு பிளாஸ்மா சிகிச்சை உதவாது என ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஒரு ஆய்வில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்கு பிளாஸ்மா சிகிச்சை (சிபி) உதவவில்லை எனக் கூறப்பட்டுள்ளதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டவர்களது பிளாஸ்மாவை தானம் பெற்று அதன்மூலம் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தும் சிகிச்சை முறை கொரோனா நோய்த்தொற்றில் பேரூதவியாகக் கருதப்பட்டு வந்தது. இந்தச் சிகிச்சை முறை முதியவர்களுக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கும் எனவும் நம்பப்பட்டது. மேலும் நோய்ப்பரவல் அதிகமாக உள்ள இடங்களுக்கு இச்சிகிச்சை முறை ஏற்றதாகவும் கருதப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா வைரஸ் விஷயத்தில் பெரிய அளவில் எடுபடவில்லை என்ற தகவலை ஐசிஎம்ஆர் வெளியிட்டு இருக்கிறது.
இத்தகவலைத் தவிர கொரோனா தடுப்பூசி பற்றிய இன்னொரு பரபரப்பு தகவலும் வெளியாகி இருக்கிறது. உலக அளவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் பெரிய முன்னேற்றமாகக் கருதப்பட்ட ஆக்ஸ்போர்ட்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் பல நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன என்றாலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகக் கண்டுபிடிப்பான கொரோனா தடுப்பூசி அனைத்து சோதனைகளிலும் வெற்றிகரமான முடிவுகளை எட்டி உலக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் பல உலக நாடுகளும் அத்தடுப்பூசி மருந்தை தயாரிக்க விருப்பம் தெரிவித்து வந்தன.
தற்போது இந்தத் தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட சோதனை உலக நாடுகள் பலவற்றில் நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பல இடங்களில் நடைபெறும் இத்தடுப்பூசிக்கான பேரிசோதனயில் சென்னையும் அடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 3 ஆம் கட்டப் பரிசோதனையில் தன்னார்வலராக இருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து “மருந்து சோதனைகளில் விவரிக்கப்படாத நோய் ஏற்படும்போதெல்லாம் இதுபோன்று பரிசோதனை நிறுத்தி வைப்பது வழக்கமான நடைமுறைதான். தீவிரமாக ஆராய்ந்து சோதனைகளின் நேர்மையை பராமரிப்பதை உறுதிச்செய்கிறோம். மிகப்பெரிய அளவில் சோதனைகள் செய்யப்படும்போது சில சமயம் தற்செயலாக ஏற்படும். ஆனால் அவை சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனாக மருந்து நிறுவனம் இரண்டும் இணைந்துதான் இத்தடுப்பூசியை தயாரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.