நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா அதிகரிப்பு காரணமாகச் சென்னையில் தற்போது ஒரு இடத்தில் கட்டுப்பாட்டு பகுதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கத்தின்போது சென்னையில் பாதிப்புகள் அதிகமாக இருந்ததால் பல்வேறு பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உருவாக்கப்பட்டு இருந்தன. பின்னர் நோய்ப்பாதிப்பு கணிசமாகக் குறைந்தது. மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சென்னையில் நாள்தோறும் 100 க்கும் குறைவாக இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் சென்னையில் அதிகரித்து வருகின்றன.
நேற்று ஒரேநாளில் 194 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் ஒரு கட்டுப்பாட்டு பகுதி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒமைக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 11 ஆக பதிவான நிலையில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 45 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் 16 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் 15-18 வயதினர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் வரும் 3 ஆம் தேதி போரூரில் உள்ள ஒரு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைப்பார் என்றும் இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 33 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தவிர 9 மாதங்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா முழுக்க ஒமைக்ரான் பாதிப்பு 781 ஆக பதிவாகி இருப்பதை மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout