12-ஆம் வகுப்பிற்கு தொடர் விடுமுறை...! தேர்வு எப்பொழுது...?
- IndiaGlitz, [Thursday,April 22 2021]
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் நடந்துமுடிந்த நிலையில், தற்போது கொரோனாவால் தொடர்விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை மனதில் கொண்டு அரசு தேர்வுகள் இயக்கம், கட்டுப்பாடுகளுடன் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடித்தது. இதன்படி தேர்வில் பங்குபெறும் மாணவர்கள் தேர்விற்கு முன்பும், பின்பும் கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியுடனும், முகக்கவசத்தை அணிந்துகொண்டும் செய்முறைத்தேர்வு நடைபெற்றது. மேலும் தீப்பற்றக்கூடிய உபகரணங்களுக்கு அருகில், சானிடைசர் கருவியை வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தல் செய்யப்பட்டது.
கொரோனா பாதிக்கப்பட்ட மாணவ-மாணவியர்களுக்கு, நோய் குணமான பின்பு செய்முறை தேர்வை நடத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த தேர்வில் 7000 பள்ளிகளில் இருந்து, சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். அரசு சார்பாக ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பொதுத்தேர்வை தள்ளி வைத்துள்ளது. நிலைமை கட்டுக்குள் வந்தபின்பு தான், தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
செய்முறைத்தேர்வுகள் முடிந்தபின்பும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வந்தால், கொரோனா பரவ வாய்ப்புள்ளது. அவர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்விற்கு தயாராக உத்திராவிடவேண்டும் என்று பல தரப்பினர் சார்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும், ஹால்டிக்கெட்டுகளை பெற்றபின் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் தொடர்விடுமுறை என்றும், மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வுக்கு தயாராகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.