தொடரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சர்ச்சை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மலேரியா நோய்க்கான மருந்துபொருளை ஏன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரிந்துரைக்கிறார் என்பது குறித்து தற்போது அந்நாட்டில் கடும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்பது பாக்டீரியாக்களை கொல்லும் தன்மையுடைய மருந்து, இந்த மருந்தால் வைரஸை கொல்ல முடியாது என பிரெஞ்சு மருத்துவர்கள் Microbiology ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பிரெஞ்சு மருத்துவர்கள் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டிருக்கின்றனர். பல வருடங்களாக இந்த மருந்து மலேரியா பாதிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இது ஒட்டுண்ணியை அழிக்கும் தன்மையுடையதாகக் கருதப்படுகிறது. 6 நோயாளிகளிடம் இந்த மருந்தை அவர்கள் சோதனை செய்துள்ளனர். அதில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுடன் அஜித்ரோமைசினும் இணைத்துக் கொடுக்கும்போது இந்த மருந்து எந்த பயனையும் அளிக்கவில்லை எனத் தெரிய வந்திருக்கிறது.
இதைக்குறித்து அந்நிறுவனத்தில் தலைமை மருத்துவர் ரவுல்ட்டின் ஆய்வு அறிக்கை வெளியிட்டார். பரிசோதிக்கப்பட்ட 3 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ஐ.சி.யுவில் வைக்கப்பட்டனர். மற்றொருவர் உட்கொள்வதை தவிர்த்து விட்டார் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இந்த அறிக்கை வெளியான அடுத்த நாள் அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் “ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுடன் அஜித்ரோமைசினும் இணைத்து கொரோனா மருந்தாக எடுத்துக்கொண்டால் மருத்துவ வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணரலாம்” எனக் குறிப்பிட்டார். இதே கூற்றை பல முறை திரும்ப திரும்ப கூறவும் செய்தார். கடந்த சனிக்கிழமை இந்த மருந்து ஒரு கேம் சேஞ்சர் எனவும் கூறியிருந்தார்.
அமெரிக்காவில் வென்டிலேட்டருக்கான கடுமையான தட்டுப்பாடுகள் நிலவி வரும் சூழலில் மருத்துவ உலகம் மாற்று மருந்தை நாடவேண்டிய அவசியத்தில் இருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும், “29 மில்லியன் அளவிற்கு மருந்துகளை அமெரிக்கா கையிருப்பில் வைத்திருக்கிறது, தேவைப்பட்டால் மற்ற நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம், இந்த மருந்தை நோயாளிகள் தாங்களாகவே பயன்படுத்தவும் செய்யலாம்” எனவும் கூறியிருந்தார்.
“இந்த மாதிரியான சோதனை தருணங்களில் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கை அளிக்கு விதமாக செயல்படவேண்டும். இந்த நோய்க்கு சிகிக்சை இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு தவறான நம்பிக்கை அளிக்கக்கூடாது” என அமெரிக்க மருத்துவர்கள் ட்ரம்ப்பின் நடவடிக்கை குறித்து வருத்தம் தெரிவித்தனர். மேலும், சிலர் ட்ரம்ப் மக்களின் மத்தியில் மிகை நம்பிக்கையை ஏற்படுத்திவருகிறார் எனவும் கூறிவருகின்றனர். இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொரோனா நோய்க்கு எப்படி பயன்படும் என்பதை இன்னும் மருத்துவ உலகம் நிரூபிக்காத நிலையில் இந்த மருந்தைக் குறித்த ஆய்வுகள் முடிக்கிவிடப்பட்டு இருக்கிறது. ஒருவேளை வைரஸ்கள் செல்களுடன் இணையும் வேகத்தை இது குறைக்க உதவலாம் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மலேரியாவுக்கு சிகிச்சை அளிப்பதை விட முடக்குவாதம், லூபஸ் போன்ற நோய்களுக்கும் மிகவும் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில், உடலில் உள்ள அதிகபடியான நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்த இந்த மருந்து திறம்பட உதவுகிறது. கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை குறைத்துவிடுவதால் மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆரம்பத்தில் Steroids, Ibuprofen போன்ற மருந்துகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் இந்த மருந்துகளும் சில பக்கவிளைவுகளை தருவதால் மருத்துவர்கள் பரிந்துரைப்பதை நிறுத்திவிட்டனர். நோய் இல்லாதவர்களிடம் கூட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தலைவலி, வாந்தி, மனஅழுத்தம், திடீர் இருதய நோயை வரவழைக்கும் தன்மைக்கொண்டது. எனவே இந்த மருந்தை எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மருத்துவ அவசர காலங்களில் இது தவிர்க்க முடியாத ஒன்று என்ற மனநிலைக்கு மக்களும் வந்துவிட்டனர். நோய் எதிர்ப்பு மண்டலங்களில் அதிக வீரியத்தை ஏற்படுத்தும் மற்ற மருந்துகளைப்போலவே இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சில நேரங்களில் பயன்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் Massachusetts மருத்துவமனையில் தற்போது இந்த மருந்து கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் வாஷிங்கடன் பல்கலைக்கழக ஆய்வு முடிவில் இது ஒரு சிறந்த வைரஸ் தடுப்பு இல்லை எனக் கூறப்பட்டிருப்பதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டியும் வருகின்றனர்.
சீனாவில் ஷாங்காய் நகரில் கொரோனா நோயாளிகள் 30 பேருக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொடுக்கப்பட்டது. ஆனால் 7 நாட்கள் கடந்த நிலையில் வைரஸில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தாலிய, இஸிரேலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்துவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன எனத் தெரிவித்தனர். ஆனால் முழுமையான பாதுகாப்பு குறித்து அவர்கள் கருத்துக் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிபர் ட்ரம்ப் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றி கூறியதில் இருந்து மக்கள் இந்த மருந்தை பதுக்கி வைக்கத் தொடங்கிவிட்டனர். அமெரிக்காவில் ஒரு நபர் மீன்தொட்டிகளில் பயன்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை உட்கொண்டு உயிரிழந்தார். இப்படி மக்கள் குழப்பங்களுக்கு ஆளாகி சில விபரீத முடிவுகளையும் எடுத்துவருகின்றனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நேரங்களில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயனுள்ளதாக இருந்தாலும் ட்ரம்ப் மிகையான நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பங்கள் தோன்றும் என அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், அதிபர் ட்ரம்ப், “லூபஸ் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை” என்றும் கூறியிருக்கிறார். இது பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்காக மக்கள் மத்தியில் சொல்லப்பட்டாலும் தவறுதலாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் நிலைமை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் மத்திய அரசு சில உயிர்காக்கும் மருந்துகளான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், பாராசிட்டமால் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு மார்ச் 26 இல் தடைவிதித்திருந்தது. ஆனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி, அங்கு மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவிவருகின்றன. இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் இந்தியப் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “இந்தியாவுடன் அமெரிக்கா நல்ல நட்புடன் இருக்கிறது. நம்முடன் வர்த்தகம் செய்து இந்தியா பல்வேறு பலன்களை அடைந்திருக்கிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தால் பரவாயில்லை. ஆனால் எதிர்காலத்தில் பதிலடி கொடுக்கப்படும்” என்று கூறியிருந்தார். ட்ரம்ப் இந்தியாவை மிரட்டும் விதமாக இந்தக் கருத்து இருக்கிறது என விமர்சனம் வைக்கப்பட்டது.
பின்னர், இந்தியா அரசு அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யும் முடிவிற்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா “சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது. இதன் மூலமே வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க முடிந்தது. சர்வதேச பொறுப்பை உணர்ந்து அத்தியாவசிய மருந்துகளை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மருந்து ஏற்றுமதிக்கான தடை பகுதியளவு நீக்கப்படுகிறது. எனினும் நமது தேவையை பூர்த்தி செய்த பிறகே, மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
தற்போது இந்தியாவிலும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றிய செய்திகளால் மக்கள் அந்த மருந்துகளை வாங்கி குவிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். இந்த மருந்து இந்திய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்புக்காகவே இது பயன்படுத்தப்படுகிறது. இந்தியா தற்போது வரை 1.5 கோடி எண்ணிக்கையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கையிருப்பில் வைத்திருக்கிறது. ட்ரம்பின் கோரிக்கையால் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யவிருக்கிறது. இதற்காக மேலும், 25 கோடி மாத்திரைகளை தயாரிக்கும் பணியை இந்திய மருந்து கம்பெனிகள் தொடங்கியிருக்கின்றன.
இந்நிலையில் ராகுல் காந்தி, மற்றநாடுகளுக்கு இந்தியா உதவி செய்வது தவறில்லை, ஆனால் இந்தியர்களுக்காவும் உயிர்காக்கும் மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். தற்போது, பொது மக்களும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றிய தேடுதல் வேட்டையில் களம் இருக்கின்றனர். இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தட்டுப்பாடு நிலவும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout