சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உயர்வு!!! தளர்வுகள் காரணமா???

  • IndiaGlitz, [Saturday,October 10 2020]

 

சென்னையில் கடந்த மே, ஜுன் மாதங்களில் கொரோனா தாக்கம் காரணமாக அதிக இடங்கள் சீல் வைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக, சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது. ஒரு ஏரியாவில் 10 பேருக்கு அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அந்த இடத்தை சீல் வைத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநாகராட்சி கடந்த ஜுன், ஜுலை மாதங்களில் அறிவித்தது. அப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அப்போது இருந்து வந்தன.

அதற்குப்பின் ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனால் ஒட்டுமொத்த சென்னையிலும் வெறுமனே 10 க்கும் குறைவான கட்டுப்பாட்டு பகுதிகளே காணப்பட்டன. தற்போது ஊரடங்கு விதிமுறைகளுக்குப் பெரும்பாலும் விலக்கு அளிக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பியிருப்பதால் தற்போது சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து சென்னை மாநகராட்சி அவற்றிற்கு சீல் வைக்கும் பணியில் தீவிரம் காட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு தெருவில் 2 அல்லது 3 என்ற எண்ணிக்கையில் இருந்தாலே அந்த இடத்திற்கு சீல் வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையில் மொத்தம் 42 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் நேற்று அந்த எண்ணிக்கை 70 ஆக உயர்ந்ததாகவும் மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி மண்டலத்தில் 4 தெருக்களுக்கும், தண்டையார் பேட்டை மண்டலத்தில் 11 தெருக்களுக்கும் ராயபுரம் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும் திரு.வி.க நகர் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 29 தெருக்களுக்கும் அண்ணாநகர் மண்டலத்தில் 3 தெருக்களுக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4 தெருக்களுக்கும் கோடம்பாக்கம் மண்டலத்தில் 3 தெருக்களுக்கும் ஆலந்தூர் மண்டலத்தில் 5 தெருக்களுக்கும், அடையாறு மண்டலத்தில் 4 தெருக்களுக்கும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும் வளசரவாக்கத்தில் ஒரு தெருவுக்கும் என மொத்தம் 70 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.