close
Choose your channels

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் பேசிய முழு உரை

Monday, February 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரையுலகினர்களும், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட கூடிய ஒரு விஷயம் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரைதான். அடிப்படையில் கமல்ஹாசன் பகுத்தறிவாளராக இருப்பதால் அவருடைய பேச்சிலும் பகுத்தறிவு ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் வகையில் இருந்தது. கருத்துச்சுதந்திரம் என்ற தலைப்பில் ஹார்வர்டு பல்கலையில் கமல்ஹாசன் பேசிய பேச்சின் முழுவடிவம் இதோ:

கருத்துச் சுதந்திரம் காதலைப் போன்றது. காதல் இருக்கும் இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையே இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். என்னவெல்லாம் சொல்ல நினைக்கிறீர்களோ? அது அத்தனையையும், மன்னிப்புக் கேட்பதற்கான அவசியம் ஏற்படுவதற்குள் சொல்லி முடிக்க உங்களால் இயல வேண்டும், அதுதான் கருத்துச் சுதந்திரம். அதுவும்கூட நீங்கள் உங்கள் உள்ளத்திலிருந்து சொல்வதாக இருக்க வேண்டும் - மன்னிப்பு கேட்பதைச் சொல்கிறேன்.

கருத்துச் சுதந்திரம்` என்ற தலைப்பை நான்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னை இங்கு அழைத்தவர்களுக்கும் அதில் நம்பிக்கை இருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு இந்தச் சுதந்திரத்தை அளித்தவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

நான் ஏன் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்துக் கொண்டேன்? அதுவும், ஏன் இப்போது? திரைத்துறையைச் சேர்ந்தவனாக, என் கருத்துகளைச் அச்சமின்றி வெளிப்படுத்துபவனாக, அத்தனை நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் சிந்திப்பவனாக இருப்பதால்தான் திடீரென்று என் கருத்துச் சுதந்திரம் பறிபோவது பற்றி பயப்படுகிறேனா? அரசியல் அல்லது சமய சக்திகள் எதுவும் என் பேச்சுரிமையை முடக்கும் வகையில் அசம்பாவிதமாகவோ அச்சுறுத்தும் வகையிலோ அண்மையில் எந்த முயற்சியாவது மேற்கொண்டிருக்கிறதா? இல்லை, அரசியல்வாதிகளும் சமய நம்பிக்கை உள்ளவர்களும், இருவருமே அப்படி நடந்து கொண்டிருக்கிறார்களா?

உண்மையைச் சொல்வதானால், அப்படியெல்லாம் இல்லை. துல்லியமாகச் சொல்வதானால், அதுபோல் எதுவுமில்லை. பரம்பரை பரம்பரையாக என் முன்னோர்கள் வழி வந்த அக்கறையில்தான் நான் குரல் கொடுக்கிறேன். என் முன்னோர்கள் தங்கள் நிலை குறித்து தங்களுக்கு இருந்த ஆழ்ந்த அக்கறையைப் பறைசாற்றிய தலைமுறையினர்.


கமல்ஹாசனின் பிரச்சினைதான் என்ன? தான் அச்சுறுத்தப்பட்டது போல் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி பேசத் தேர்ந்தெடுக்க அவனுக்கு என்ன குறை இருக்கிறது? அதிலும் சுதந்திரங்கள் தழைக்கும், குறிப்பாக, பேச்சுச் சுதந்திரம் சிறப்பிக்கப்படும் ஜனநாயகத்தின் கோட்டை, அமெரிக்காவில் அதைப் பேச வேண்டிய அவசியம் என்ன? இங்கு நீங்கள் நினைத்ததைச் சொல்ல முடியும், ராப் பாட முடியும், கெட்ட வார்த்தை பேச முடியும், உங்கள் கல்வியைக் காட்டிக் கொள்ள கௌரவமான மொழியையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட சுதந்திரம் இங்கு இருக்கிறது. இதுவா கருத்துச் சுதந்திரம்? இந்தச் சுதந்திரம் போதுமா?

இதுபோன்ற ஒரு சுதந்திரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே லண்டனில் ஹைட் பார்க் வழங்கியிருக்கிறது. உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கிய அது சோப் பாக்ஸ் பேருரை என்று அழைக்கப்பட்டது. வரலாற்றினூடே எத்தனை கள்ளத்தனமாக நகர்ந்தாலும் சரி, மக்களை ஒடுக்கும் சந்தர்ப்பவாத அரசியலின் கரங்களைப் பலரும் தெளிவாக, பல நூற்றாண்டுகளாய் தெளிவாகக் கண்டு வந்திருக்கின்றனர். ரோமின் செனேட் முதல் இந்நாளைய செனேட் வரை.

கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்படும் அரண் ஜனநாயகம் மட்டும்தான் என்று கொண்டாடப்படுகிறது. ஆனால், ஜனநாயகம் அப்படியொன்றும் அப்பழுக்கற்ற அரசியல் அமைப்பு அல்ல என்று சொல்லும்போது என் கருத்து கேள்விக்குட்படுத்தப்படுகிறது. கொதிக்கிறார்கள், ஆத்திரப்படுகிறார்கள்.. சிவப்பு என் அரசியலின் நிறம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பதை நான் இங்கு சொல்ல வேண்டும். இதுதான் என் மதம் என்பதுபோல் ஒரே உணவு உண்பவர்கள் போலில்லாமல் நான் அரசியல் சித்தாந்தங்கள் நிறைந்த இந்த சர்வதேச பஃப்பே விருந்தில் திளைக்கிறேன். உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருக்க வேண்டுமென்றால் மனிதனும் உணவுப் பழக்கத்தைப் போலவே எல்லாம் உண்டு செரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனக்கு மதம் கிடையாது. ஆனாலும் மேன்மையான, இணக்கமான வாழ்வு வாழ நான் சில அபூர்வமான, நுட்பமான விஷயங்களை மதத்தில் இருந்தும் வெட்கமில்லாமல் பயன்படுத்திக் கொள்கிறேன்.

சமூகத்தில் நிலவும் அத்தனை நோய்களுக்கும் இறுதி தீர்வு, ஒரே தீர்வு என்று ஜனநாயகமோ, கம்யூனிசமோ, பாசிசமோ அல்லது எந்த ஒரு இசமுமோ இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். கடந்த பத்தாயிரம் ஆண்டு காலமாக நாம் வெவ்வேறு கலவைகளை முயற்சி செய்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் நாம் முன்னேற்றப் பாதையைக் கண்டறிந்தபடிதான் இருக்கிறோம். நம் சமூக அமைப்பே முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் முயற்சிதான். மனித மனமே முன்னேற்றப் பாதையில் வளர்ந்து வருகிறது என்று சில விஞ்ஞானிகளும்கூட சொல்கிறார்கள். எனவே, எந்த ஒரு அரசியல் சித்தாந்தத்தையும் நம் துன்பங்கள் அத்தனைக்கும் தீர்வு கண்டு விட்டது என்று நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

ஜனநாயகத்தில் மட்டுமே கருத்துச் சுதந்திரம் இருக்க முடியும் என்ற உண்மையை நீ மறுக்க முடியுமா என்று என்னிடம் கடுமையாகக் கேட்கப்பட்டது உண்டு. ஆனால் வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட பணம் போல் சுதந்திரத்தைப் பொத்திப் பாதுகாக்க முடியாது. ஆபத்து காலத்தில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வரை வட்டி போட்டு வளரட்டும் என்று அதைப் பூட்டி வைக்க முடியாது.

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். நுட்பமான முறையில் நம்மைக் கட்டுப்படுத்தும் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக எப்போதும் காவல் நிற்கும் மிகப்பெரிய ஒரு சமூகத்தின் உறுப்பினன் நான். அதனால்தான் கலாசாரத்தின் பெயராலும் அரசின் பெயராலும் பிற குரல்களையும் திரைப்படங்களையும் பிறர் அறியாத வகையில் தணிக்கை செய்யும் திரைப்பட தணிக்கை அமைப்பின் செயல்பாட்டைச் சீர்திருத்தும் வகையில் பரிந்துரைகள் செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டியில் பணியாற்றும் வாய்ப்பை நான் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான் இங்கே ஜனநாயகத்தை விமரிசிக்கவோ கம்யூனிசத்தையோ சோஷலிசத்தையோ போற்றிப் புகழவோ வரவில்லை. ஊடகங்களின் வழியாகவும் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளத் தயாராய் உள்ள திறந்த உள்ளங்களின் மூலமாகவும் கருத்துச் சுதந்திரம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நாம் ஜனநாயகம் என்றால் தானாகவே அது கருத்துச் சுதந்திரம் என்று பொருள்படுகிறது என்ற நினைப்பில் கவனமில்லாமல் இருந்து விடக்கூடாது என்று பதிவு செய்யவே நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். ஜனநாயக அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டுதான் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். அது உலகம் வெகுளியாய் இருந்த காலம், இனி அதுவெல்லாம் சாத்தியமில்லை என்று சிலர் சொல்கிறார்கள். நாம் வரலாற்றில் சற்றே முன்னோக்கிச் சென்றால், இந்திய அரசியல் வரலாற்றில்கூட அவசர நிலைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு உலகறிய எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டதைப் பார்க்கிறோம்.

இங்கு நான் என் தேசத்தைக் குறை சொல்வதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அதிகார துஷ்பிரயோகம் செய்ய எத்தனையோ முயற்சிகள் செய்யப்பட்டபோதும் நடைமுறையில் வெற்றி கண்டிருக்கும் நம் ஜனநாயகம் குறித்து நான் பெருமைப்படுகிறேன் என்பதுதான் உண்மை. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நூற்றாண்டுகளாய் நிலவும் ஜனநாயகத்துடன் ஒப்பிடும்போது இந்திய ஜனநாயகம் மிகவும் இளையது. ஆனாலும்கூட அமெரிக்க ஜனநாயக அமைப்பில் நடைமுறைக்கு வருவதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் அத்தனை குடிமக்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டு விட்டது.

சுதந்திரமோ கருத்துச் சுதந்திரமோ, அது ஜனநாயகத்தால் வழங்கப்படவில்லை. மாறாய், கருத்துச் சுதந்திரமும் பிற சுதந்திரங்களுமே ஜனநாயகத்தை சாத்தியப்படுத்தி இருக்கின்றன. ஜனநாயகத்தின் இயல்பை வடிவமைத்து அதற்கு கலாசார பலம் அளித்தது கருத்துச் சுதந்திரம்தான். அதுவரை ஒடுக்கப்பட்டிருந்த குரல்கள் மார்டின் லூதர் கிங்கின் சிறப்பான தலைமையில் இணைந்து ஓங்கி ஒலித்தன. அவரது குருதியை மையாய்க் கொண்டு இந்த மண்ணின் சட்டம் திருத்தி எழுதப்பட்டது. அதன் பின்னரே அமெரிக்காவில் மாற்றம் ஏற்பட்ட காலம் பிறந்தது.

இந்தியா மட்டுமில்லை, உலகமே மாறிக் கொண்டிருக்கிறது. இனி வரும் உலகம் புதிய சவால்களை எதிர்கொண்டு புதிய வாய்ப்புகளை காணப் போகிறது. என் வாழ்நாளில் எல்லைக் கோடுகள் மங்கி மறையும் என்றுகூட என்னால் நம்பிக்கை கொள்ள முடிகிறது. நம்மைக் கட்டுப்படுத்தும் குட்டிச்சுவர்களைப் பற்றி பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவர்களாக இல்லாமல் நாம் அனைவரும் மெல்ல, ஆனால் உண்மையாகவே உலகக் குடிமகன்களாய் ஆவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. அது நடப்பதற்கு முன் பற்பல விசில்கள் அடிக்கப்படும். கருத்துச் சுதந்திரத்தைப் பிரதிபலித்து பாதுகாக்கும் ஊடகத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்திருக்கிறது, அது குறித்து நான் பெருமைப்படுகிறேன். கருத்துக் சுதந்திரத்தைக் காக்க மறைமுகமாய் போராடும் ஊடகம் இது, தேவைப்பட்டால் இந்த ஊடகத்தைக் கொண்டு நேருக்கு நேர் மோதவும் முடியும்.

இதை எல்லாம் ஹார்வர்டில் பேசப் போகிறீர்களா, என்று என் நண்பர்கள் சிலர் திகைப்புடன் கேட்டார்கள், சிலரால் நம்ப முடியவில்லை. கல்விக் கட்டிட வளாகத்துக்குள் அளிக்கப்படும் பயிற்சிக் குறைவு எனக்கிருப்பது தொடர்ந்து நினைவுபடுத்தப்படுகிறது- நான் உயர்நிலைப்பள்ளிக்கு மேல் படிக்காதவன் என்பதை இங்கு தன்னடக்கத்துடன் நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு காலத்தில் படிப்பை நிறுத்தியது பற்றி பெருமைப்பட்டுக் கொண்டே நான் கல்வி பெற்றவர்கள் வட்டத்தில் என் குறைகள் குறித்து யாரும் குற்றம் சொல்ல முடியாதபடி பழகிக் கொண்டிருந்தேன், என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். என்ன இருந்தாலும் நான் ஒரு நடிகன், என்னிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? தக்க வசனங்களை நான் அறிந்திருந்தேன்.

இப்போது, காலப்போக்கில் நான் கல்வியின் மதிப்பையும் கல்வி நிறுவனங்களின் மதிப்பையும் அறிந்து கொண்டிருக்கிறேன். மகத்தான இந்த அமைப்புகளும் தொடர்ந்து சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது உண்மையாக இருக்கலாம். மாற்றமே நிலையானது, தேக்கம் செயலின்மைக்கும் பின்னடைவுக்கும் கொண்டு செல்லும் என்ற சாதாரண புரிதலை ஏற்றுக் கொள்கிறேன். அறிவியல்பூர்வமாய் முறைப்படி கற்றுக் கொடுக்கும் அமைப்புகளில், நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறையில் செய்திறனையும் அறிவையும் நோக்கி தொடர்ந்து முயற்சி செய்து வரும் உங்களைப் பார்த்து எப்போதும் பொறாமைப்படுகிறேன்.

மீண்டும் திரைப்படக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற என் கனவை நான் சொல்வது ஒரு தன்னடக்கம் என்று குழப்பிக் கொள்கிறார்கள், அதுவும் பொய்யான தன்னடக்கம் என்று நினைக்கிறார்கள். நம்புங்கள், உண்மையாகவே அது தன்னடக்கம்தான், காலமும் அனுபவமும் கற்றுத்தந்த தன்னடக்கம் அது. அதுவும், இரக்கமின்றி எனக்குப் புகட்டப்பட்ட பாடம். நான் திரைத் துறையில் கழித்த காலத்தில் சின்னச் சின்ன உத்திகள் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஐம்பத்து சொச்சம் ஆண்டுகள். இருபத்து ஐந்து ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்டதை நல்ல ஒரு திரைக் கல்லூரி ஐந்து, அல்லது ஏழு ஆண்டுகளில் கற்றுக் கொடுத்திருக்கும். இதில் ஒரே வித்தியாசம், நல்ல ஒரு ஆறுதல் என்னவென்றால், நான் என் கல்விக்கு செலவு செய்யாமல் பணம் சம்பாதித்தேன். அது நல்ல கொடுக்கல் வாங்கல்தான் என்று நினைக்கிறேன்.

பல துறைகளிலும் இந்தியா பெரும்பாய்ச்சல் நிகழ்த்தப் போகிறது. நான் செயல்படும் துறையில், உண்மையாகவே உலகளாவிய சந்தையில் சர்வதேச அளவில் போட்டியிட இந்தியாவைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறோம். நூற்று இருபது கோடி மக்கள் கொண்ட ஒரு உள்ளூர் சந்தையே போதும் என்று அதன் குறுகிய எல்லைகளுக்குள் மகிழ்ச்சியாய் சிறைப்பட்டிருக்கக் கூடாது, இந்தியா விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியா உலகளாவிய தரங்களை நிர்ணயிக்க கூடும் என்று விரும்புகிறோம். முன்னர் இதைச் செய்திருக்கிறோம். சத்தியாகிரகத்தின் முன்னோடிகளும் செயல்வீரர்களும் நாம்தான். ஹென்றி டேவிட் தோரோ உருவாக்கிய கோட்பாடு. நாம் அதை நடைமுறைப்படுத்தினோம். ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாசாரிக்கும் நமக்கேயுரிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்குமே இதற்கான பெருமை உரித்தாகும். மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா முதலான மகத்தான மனிதர்களுக்கு வழிகாட்டும் முன்னோடியானது இந்தியா. எப்போதும் சோர்விலன் என்று சொல்லத்தக்க அந்த மாமனிதர்களின் விழிப்புணர்வு நான் அச்சமின்றி, ஆனால் பொறுப்புணர்வுடன் பேசக் காரணமாகியிருக்கிறது.

அவர்களின் சுதந்திரப் போராட்ட வழிமுறையை மதிக்கிறேன். அபூர்வமான சில நிகழ்வுகளில், வன்முறையை அகிம்சையால் எதிர்கொண்டு கருத்துச் சுதந்திரம் வென்றடையப்பட்டது. அனைவர்க்கும் சாத்தியமான விஷயமில்லை இது. வன்முறையை அகிம்சை கொண்டு எதிர்கொள்வதற்கு அசாதாரண வீரம் வேண்டும். பொதுவாகவே தன்னடக்கம் கொண்டவராக திகழும் காந்தி, அகிம்சையே மிகவும் உயர்ந்த தீரம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் காரணம் உண்டு. அதனால்தான் இருபத்து நான்காம் தீர்த்தங்கரர், ஜைன முனிவர், அகிம்சையை போதித்தவர், மகாவீரர் என்று அழைக்கப்பட்டிருக்க கூடும். மகத்தான வீரர்.

அகிம்சை மிகக் கடினமான லட்சியம், புலால் மறுப்பு மூலம் மட்டும் அடையப்படுவது அல்ல அது. புலால் தவிர்க்கும் ஒருவன் சக மனிதனின் துயரங்களைக் கண்டு கொள்ளாதபோது அகிம்சையின் நோக்கம் தோல்வியடைகிறது. என் மனதில் எப்போதும் டார்வினின் கோட்பாட்டுக்கும் அகிம்சையின் வசீகரச் சித்தாந்தத்துக்கும் போராட்டம் நிகழ்ந்தபடியே இருக்கும். இது வேறொரு மேடையில் பேசப்பட வேண்டிய விஷயம்.

மீண்டும் நான் உங்களையும் என்னையும் தொடர்ந்து விழித்திருக்கும்படி நினைவுபடுத்திக் கொள்கிறேன். தன்னைக் காட்டிலும் பரந்த சமூகத்தைப் பொருட்படுத்தாமல் எந்த ஒரு அரசு அமைபுப்ம் மதமும் வெளிப்படையாகவோ மறைமுகமாவோ உங்கள் மனதைக் குறுகிய ஒரு தன்னலம் மிகுந்த நோக்கத்தின் பொருட்டு கட்டாயப்படுத்தும்போது, நாம் அது குறித்து எச்சரிகையோடு இருந்தாக வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment