தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் நள்ளிரவில் கைது: கொலை வழக்கும் பதிவு

  • IndiaGlitz, [Saturday,July 04 2020]

சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரணம் குறித்த வழக்கில் ஏற்கனவே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்துராஜை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை நேற்று நள்ளிரவில் சிபிசிஐடி போலீசார் அவரது சொந்த ஊரில் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காவலர் முத்துராஜ் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அரசன்குளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் சிபிசிஐடி போலீசார் அவரது சொந்த ஊருக்கு விரைந்து, முதலில் அவரது பைக் அந்த பகுதியில் கேட்பாரற்று இருப்பதை கண்டுபிடித்தனர். அதன்பின் அரசன்குளத்தில் இருந்த முத்துராஜை கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தந்தை மகன் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது